தென்னாப்பிரிக்க அணி ரன் குவிப்பு: ஆஸி. திணறல்!

தென்னாப்பிரிக்க அணி ரன் குவிப்பு: ஆஸி. திணறல்!
தென்னாப்பிரிக்க அணி ரன் குவிப்பு: ஆஸி. திணறல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 488 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி பாலோ ஆனை தவிர்க்க போராடி வருகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், அடுத்த இரண்டு டெஸ்ட்களில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இந்த அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வருகிறது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் சுமித், டேவிட் வார்னர், பேன்கிராஃப்ட் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு பதிலாக ஜோ பர்ன்ஸ், ரென்ஷா, ஹேண்ட்ஸ்கோம்ப் சேர்க்கப்பட்டனர். காயமடைந்த மிட்செல் ஸ்டார்க்குக்கு பதில் அறிமுக வீரர் சாட் சயர்ஸ் களமிறங்கினார்.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் 19 ரன்களில் வெளியேறினாலும் மற்றொரு தொடக்க வீரர் மார்க்ராம் நிலைத்து நின்று சதமடித்தார். அவர் 152 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் சேர்த்தது. பவுமாவும் 25 ரன்களுடன், டி காக் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று தொடர்ந்தது. டிகாக் 39 ரன்களில் லியான் பந்தில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேசவ் மகாராஜ் அதிரடியாக ஆடி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிலாண்டர் 12 ரன்களிலும் மோர்கல் ரன் எதுவும் எடுக்காமலும் நடையை கட்டினர். இதனால் பவுமாவின் சதம் அடிக்கும் வாய்ப்பு பறிபோனது. அவர் 95 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 488 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டும் லியான் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.


பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சால் தொடந்து விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரென்ஷா 8 ரன்களிலும் பர்ன்ஸ் 4 ரன்களிலும் ஆட்டமிழக்க, கவாஜா போராட்டிப் பார்த்தார். அவர் 53 ரன்களில் ஆட்டமிழந்ததும் அணி தடுமாற தொடங்கியது. அடுத்து வந்த ஹேண்ட்ஸ்கோப் ரன் எதுவும் எடுக்காமலும் ஷான் மார்ஷ் 16 ரன்களிலும் மிட்செல் மார்ஷ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து பாலோ ஆனை தவிர்க்கப் போராடி வருகிறது.
கேப்டன் பெய்ன் 5 ரன்களுடன் கம்மின்ஸ் 7 ரன்களுடன் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்க தரப்பில் பிலாண்டர் 3 விக்கெட்டுகளையும் ரபாடா, மோர்கல், மகாராஜ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com