ப்ளூ ஜெர்ஸிக்கு திரும்பிய இந்தியா : ரசிகர்கள் வரவேற்பு..!
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றைய உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி மீண்டும் ப்ளூ ஜெர்ஸிக்கு திரும்பியுள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 40வது லீக் போட்டி இன்று இந்தியா பங்களாதேஷ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி மறுபடியும் ப்ளூ ஜெர்ஸியுடன் களமிறங்கியுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்திய அணி கடந்த போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்த தோல்விக்கு 338 ரன்கள் என்ற கடினமான இலக்கு காரணமாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பல்வேறு காரணங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தனர். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று புதிய ஜெர்ஸி. பிசிசிஐ அண்மையில் அறிமுகப்படுத்திய இந்திய அணியின் புதிய ஜெர்ஸி பெரும்பாலும் ஆரஞ்சு நிறம் கொண்டதாக இருந்தது. இதனை காவி நிறம் போல உள்ளது என ரசிகர்கள் விமர்சித்தனர். சிலர் ஜெர்ஸி-யால் தான் அணி தோற்றதாக அர்த்தமற்ற விமர்சனங்களையும் முன்வைத்தனர். இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி மீண்டும் பழைய ப்ளூ ஜெர்ஸியுடன் களமிறங்கியுள்ளது.