அச்சுறுத்தும் கொரோனா... தள்ளி வைக்கப்படும் விளையாட்டு போட்டிகள்: வெளியானது புதிய அறிவிப்பு

அச்சுறுத்தும் கொரோனா... தள்ளி வைக்கப்படும் விளையாட்டு போட்டிகள்: வெளியானது புதிய அறிவிப்பு
அச்சுறுத்தும் கொரோனா... தள்ளி வைக்கப்படும் விளையாட்டு போட்டிகள்: வெளியானது புதிய அறிவிப்பு

வங்கதேசத்தில் மார்ச் 21, 22 தேதிகளில் நடைபெற இருந்த உலக லெவன் மற்றும் ஆசிய லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தள்ளி வைக்கப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஜ்முல் ஹஸன் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி மார்ச் 21, 22 தேதிகளில் ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் இடையிலான டி20 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. வங்கதேச தலைநகரான டாக்காவில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆசிய லெவனில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர். உலக லெவனில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பதாக இருந்தது.

ஆசிய லெவனில் இந்திய அணியில் இருந்து 6 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில், விராட் கோலி, கேஎல் ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பன்ட், முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் கேஎல் ராகுல் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தார். உலக லெவன் அணிக்கு தென் ஆப்பிரிக்காவின் டு பிளசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஆசிய லெவன் அணிக்கு யார் கேப்டன் என தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஜ்முல் ஹஸன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மார்ச் 21, 22 தேதிகளில் ஆசிய மற்றும் உலக லெவன் அணிகளுக்கு இடையே டி20 போட்டிகளை நடத்த திட்டமிட்டிருந்தோம். அதற்கு முன்னதாக மார்ச் 18 ஆம் தேதி ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இவற்றையெல்லாம் திட்டமிட்டப்படி நடத்துவதற்கு இப்போது சற்றே சிரமம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் இப்போதைக்கு இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்து, பின்பு பிரமாண்டமாக நடத்தலாம் என முடிவு செய்துள்ளோம்" என்றார்.

மேலும் தொடர்ந்த நஜ்முல் ஹசன் "வீரர்கள் வங்கதேசம் வந்து விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார்கள். ஆனால் இப்போது கோரோனா வைரஸ் பாதிப்பு உலகெங்கும் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்போதைக்கு இரண்டு மாதங்கள் இரு போட்டிகளையும் தள்ளி வைக்கின்றோம். உலகெங்கும் நிலைமை சீரான பின்பு, ஆசிய மற்றும் உலக லெவன் இடையிலான போட்டிகள் நடக்கும்." என்றார் அவர்.

முன்னதாக, பல்வேறு விளையாட்டு போட்டிகள் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சில போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதிக அளவு ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டிகளே கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com