அபார வெற்றிதான்! ஆனால், இந்திய அணி இந்த 5 விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்!

அபார வெற்றிதான்! ஆனால், இந்திய அணி இந்த 5 விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்!
அபார வெற்றிதான்! ஆனால், இந்திய அணி இந்த 5 விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான 3ஆவது ஒருநாள் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற்று விளையாடி வருகிறது. முன்னதாக தொடங்கப்பட்ட 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச அணி முதல் 2 போட்டிகளையும் வென்று ஏற்கனவே தொடரை வென்று விட்டது. இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி தொடங்கிய நிலையில், இந்த போட்டியில் ஆறுதல் வெற்றிபெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியது. முந்தைய போட்டியில் கையில் அடிபட்ட நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா தொடரிலிருந்து விலகிய நிலையில், கேப்டன் பொறுப்பை துணை கேப்டனான கேஎல் ராகுலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 3ஆவது போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இஷான் கிஷன் மற்றும் விராட் கோலியின் 290 ரன்கள் பார்ட்னர்ஷிப் உதவியால் 409 ரன்களை குவித்தது. அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் தனது முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றி 210 ரன்கள் குவித்து அசத்தினார். விராட் கோலியும் 3 வருடங்களிற்கு பிறகு ஒருநாள் போட்டியில் சதமடித்து, தனது 44ஆவது ஒருநாள் சதத்தை அடித்து அசத்தினார்.

பின்னர் 410 என்ற இமாலய இலக்கை துறத்திய வங்கதேச அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. நல்ல தொடக்கத்தை கொடுத்து 43 ரன்கள் அடித்த ஷாகிப் அல் ஹசனை பவுல்டாக்கி வெளியேற்றினார் குல்தீப் யாதவ். பின்னர் அடுத்தடுத்து வந்த பேட்டர்கள் தொடக்கத்தை கொடுத்தாலும் நிலைத்து நிற்காமல் வெளியேற 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேச அணி. முடிவில் மூன்றாவது ஒருநாள் போட்டியை 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் ஆறுதல் வெற்றியை பதிவுசெய்த்தது இந்திய அணி.

பந்துவீச்சை பொறுத்தவரையில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகள், அக்சர் பட்டேல் மற்றும் உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்குகிறது.

1. தொடக்க வீரர்களில் ஒருவர் நிச்சயம் அக்ரசிங் ஆக விளையாட வேண்டும். அதனால், ரோகித் சர்மா அல்லது ஷிகர் தவான் இருவரில் ஒருவருக்கு பதிலாக இஷான் கிஷன் போன்ற வீரர்களை பரிசோதித்து பார்க்கலாம். உலகக் கோப்பையை முன்னிட்டு அவர்களை தயார் படுத்தலாம். அதாவது, சேவாக் போன்ற ஒரு வீரர் அணிக்கு தேவை. 

2. ஒரு நாள் போட்டியை பொறுத்தவரை குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று வீரர்கள் நன்றாக விளையாட வேண்டும். அரை சதம், சதம் அடிக்க வேண்டும். இந்தப் போட்டியிலும் கூட இஷான் கிஷன், விராட் கோலி அமைத்த அருமையான அடித்தளத்தை கடைசி 15 ஓவர்களில் சரியாக பயன்படுத்திக் கொள்ள வில்லை. ஒரு வேளை வாஷிங்டன் சுந்தர் - அக்ஸர் பட்டேல் ஜோடி 50 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை என்றால் 400 ரன்களுக்கு கீழ் தான் அடிக்கப்பட்டிருக்கும். 

3. வேகப்பந்துவீச்சில் உலகக் கோப்பை அணிக்கு யாரை தயார் செய்வது என்பதை விரைவில் முடிவு செய்துவிட வேண்டும். பும்ரா, புவனேஸ்வர் குமார் போன்றவர்களில் யாருக்கேணும் காயம் ஏற்பட்டால் சிக்கல் ஏற்பட்டுவிடும். அதனால், சிராஜ், உம்ரான் மாலிக் போன்ற யாராவது ஒரு சீமரை ஒரு வருடத்திற்கு தயார் செய்ய வேண்டும். 

4. பந்துவீச்சில் இன்றைய ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. 400 ரன்களுக்கு மேல் அடித்திருப்பதால் எதிரணிக்கு சற்றே பயம் இருந்திருக்கும். அதனால், ஆட்டமிழந்திருக்கக்கூடும். ஒருவேளை 250 ரன்கள் அடித்திருந்தால் இந்திய அணியின் பந்துவீச்சு எப்படி இருந்திருக்கும் என்பது தெரியாது. குறைவான ரன்கள் அடித்து அதனை டிபண்ட் செய்தால்தான் இந்திய அணியின் பந்துவீச்சு உண்மை நிலை நமக்கு தெரியும்

5. இன்றையப் போட்டியில் பீல்டிங் சிறப்பாகவே இருந்தது. இதனையே அடுத்து வரும் போட்டிகளில் இந்திய அணி தொட வேண்டும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com