பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையேயான போட்டி மழையால் தாமதம் ஆகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே இன்று நடைபெறுகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸை வென்று முதல் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இரவு 8 மணிக்கு தொடங்கவிருந்த இந்தப் போட்டி மழையால் சற்று தாமதமானது. எனவே 10 நிமிடங்கள் தாமதமாக போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
பின்னர் மழை நீடித்ததால் போட்டி 9 மணிக்கு தொடங்கும் எனப்பட்டது. அதற்கேற்றவாறு மழையும் சற்று ஓய்ந்ததால் கண்டிப்பாக போட்டி 9.15 மணிக்குள் தொடங்கிவிடும் எனப் பேசப்பட்டது. ஆனால் அதன்பின்னர் மீண்டும் மழை தொடங்கியது. இதனால் 9.45ஐ தாண்டியும் போட்டி தொடங்கவில்லை.
இந்நிலையில் மைதானத்தின் நிலை மற்றும் தடங்கலான மழை இவை இரண்டின் காரணமாக போட்டி 20 ஓவர்களில் இருந்து 5 ஓவர்கள் போட்டியாக மாற்றப்படவுள்ளதாக பேசப்படுகிறது. இதனால் போட்டியை ஆவலுடன் காண வந்த ரசிகர்கள் மற்றும் டிவி, ஆன்லைன் ஆகியவற்றில் காணவிருந்த ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.