கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி : மேட்ச் ரிவ்யூ

கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி : மேட்ச் ரிவ்யூ
கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி : மேட்ச் ரிவ்யூ

ஐபிஎல் தொடரின் 28வது லீக் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். முதல் பேட்டிங்கில் அதிக ரன்களை குவித்தால், எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து வெற்றி பெறலாம் என அவர் திட்டமிட்டிருந்தார். அவரது திட்டப்படியே போட்டி சென்றது.

முதல் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களான ஆரோன் ஃபின்ச் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 23 பந்துகளில் 32 ரன்களை அடித்த படிக்கல் ரஸல் வீசிய பந்தில் போல்ட் அவுட் ஆனார். அதற்கு முன்பு அவருக்கு ஒரு கேட்ச் மிஸ்ஸாகி வாய்ப்பு கிடைத்திருந்தது. பின்னர் வந்த கோலியுடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஆரோன் ஃபின்ச், 47 (37) ரன்களை அடித்துவிட்டு அவுட் ஆகி அரை சதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் டி வில்லியர்ஸுடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த கோலி முயன்றார். அதற்குள் டி வில்லியர்ஸ் பற்ற வைத்த பட்டாசு போல வெடிக்க ஆரம்பித்துவிட்டார். பந்துகளை பறக்கவிட்ட அவர் 23 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

கடைசி வரை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்ற கோலிக்கு பேட்டிங் செட்டாகவில்லை. 28 பந்துகளை சந்தித்த அவரால் 33 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதில் ஒரு பவுண்டரியை மட்டுமே அவர் அடித்திருந்தார். மறுபுறம் மிஸ்டர் 360 டிகிரி என்பதை மீண்டும் நிரூபித்த டி வில்லியர்ஸ், 33 பந்துகளில் 73 ரன்களை விளாசியிருந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு பெங்களூர் அணி 194 ரன்களை குவித்திருந்தது.

கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி மட்டும் 4 ஓவர்களுக்கு 25 ரன்களை கொடுத்திருந்தார். மற்ற பவுலர்கள் அனைவரும் ரன்களை வாரிக்கொடுத்திருந்தனர். எதிர்பார்ப்புகள் நிறைந்த பட் கம்மின்ஸ் கூட 4 ஓவர்களுக்கு 38 ரன்களை விட்டுக்கொடுத்ததுடன் விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை. கொல்கத்தா அணியின் ஃபீல்டிங்கிலும் சொதப்பல் இருந்தது. கேட்ச் மிஸ்ஸிங், பவுண்டரி மிஸ்ஸிங் என தடுமாற்றங்கள் காணப்பட்டன.

195 ரன்கள் என்ற சவாலான இலக்கை எதிர்த்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறக்கப்பட்ட சுப்மான் கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் டாம் பாண்டான் 12 பந்துகளுக்கு 8 ரன்களை மட்டும் எடுத்துவிட்டு நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து வந்த நிதிஷ் ரானா மற்றும் இயான் மார்கன் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, கேப்டன் தினேஷ் கார்த்திக்கோ இன்னும் ஒருபடி கீழேபோய் ஒரே ஒரு ரன்னை மட்டுமே அடித்துவிட்டு பெவிலியன் திரும்பினார்.

64 ரன்களுக்கு கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகளை இழக்க, அதன்பின்னர் ஆண்ட்ரிவ் ரஸல் மற்றும் திரிபாதி ஜோடி சேர்ந்தனர். இசுரு உதானா வீசிய 14வது ஓவரின் முதல் 3 பந்துகளில் பவுண்டரி, சிக்ஸ், பவுண்டரி என ரஸல் அடிக்க பெங்களூர் அணிக்கு லேசாக அச்சம் வந்தது. ஆனால் அதே ஓவரில் ரஸல் கேட்ச் அவுட்டாக, கொல்காத்தா அணிக்கு தோல்வி நெருங்கியது. பின்னர் சிறிது நேரம் களத்தில் நின்ற திரிபாதியும் 22 பந்துகளில் 16 ரன்களை எடுத்துவிட்டு விக்கெட்டை பறிகொடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பெங்களூர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா பேட்டிங்கில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நிற்காதது பின்னடைவாகது அமைந்தது. சுப்மான் கில்லுக்கு யாரேனும் ஒருவர் பார்ட்னர்ஷிப் கொடுத்திருந்தால் இலக்கை நோக்கி பயணித்திருக்கலாம். டாம் பண்டானை மிடில் ஆர்டரில் களமிறக்கி, திரிபாதியையே தொடக்க வீரராக பேட்டிங் செய்ய வைத்திருந்தால் விக்கெட் இழப்புகளை தடுத்திருக்கலாம் எனத் தோன்றியது.

பெங்களூர் அணியின் பந்துவீச்சில் அனைத்து வீரர்களையுமே சரியான நேரத்தில் பயன்படுத்தியது சிறப்பு. அசத்தலாக பந்துவீசிய யஸ்வேந்த்ர சாஹல் 4 ஓவர்களுக்கு 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். மறுபுறம் 4 ஓவர்களுக்கு 20 ரன்களை மட்டுமே கொடுத்த வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். இதேபோன்று 4 ஓவர்களுக்கு 17 ரன்களை மட்டுமே கொடுத்த கிரிஸ் மோரிஸ் தனது பங்கிற்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நிறைய கேட்ச்களை தவறவிட்டிருந்தாலும், சிறப்பான பந்துவீச்சு எனும் ஒற்றை ஆயுதத்தால் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com