மல்யுத்த தரவரிசை: இந்திய வீரர் பஜ்ரங் புனியா முதலிடம் பிடித்து சாதனை
உலக மல்யுத்த தரவரிசையில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா, முதல் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. 65 கிலோ எடைப்பிரிவில் சமீப காலமாக சிறப்பான வகையில் செயல்பட்டு வருகிறார். காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற இவர், உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதையடுத்து உலக மல்யுத்த வீரர்களின் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
இதுபற்றி பஜ்ரங் புனியா கூறும்போது, ‘எந்த ஒரு வீரருக்கும் முதல் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. அது எனக்கும் இருந்தது. இப்போது அது நனவாகி இருக்கிறது.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று இந்த நம்பர் ஒன் இடத்துக்கு வந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன். அதோடு ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் பெற்ற பிறகே இதை கொண்டாடுவேன்’ என்றார்.
இந்த தரவரிசையில் இந்தியாவை சேர்ந்த 5 பெண் வீராங்கனைகள் முதல் பத்து இடத்துக்குள் வந்துள்ளனர்.

