பாபர் சதம், ஷின்வாரி 5 விக்கெட்: இலங்கையை சுருட்டிய பாகிஸ்தான்!
இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாபர் ஆசமின் அபார சதத்தால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவது ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, கராச்சியில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அந்த நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பாபர் ஆசம் 115 ரன்கள் விளாசினார். தொடக்க ஆட்டக்காரர் பஹர் ஜமான் 54 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 46.5 ஓவர்களில் 238 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி, 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷேகன் ஜெயசூர்யா 96 ரன்களும், தசுன் ஷனகா 68 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் உஸ்மான் ஷின்வாரி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.