"கோலியுடன் தன்னை ஒப்பிட வேண்டாம்" பாக் வீரர் பாபர் அசாம்

"கோலியுடன் தன்னை ஒப்பிட வேண்டாம்" பாக் வீரர் பாபர் அசாம்

"கோலியுடன் தன்னை ஒப்பிட வேண்டாம்" பாக் வீரர் பாபர் அசாம்
Published on

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வேகமாக வளர்ந்து வரும் இளம் வீரர் பாபர் அசாம். இவர் பாகிஸ்தான் அணியில் 2015 முதல் விளையாடிவருகிறார். பாபர் அசாம் பாகிஸ்தானுக்காக இதுவரை 59 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8 சதங்கள் உட்பட 2462 ரன்கள் எடுத்துள்ளார். இவர் பாகிஸ்தான் அணியில் நீண்ட நாள் பிரச்சினையாக இருந்த 3வது ஆட்டக்காரர் இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இவர் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக முதல் 5 சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம்பிடித்தார். அத்துடன் 20ஓவர் போட்டிகளில் வேகமாக 1000 ரன்களை எட்டியவர் பாபர் அசாம் தான்.

பாபர் அசாம் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்டார். இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி சரியாக விளையாடவில்லை. ஆனாலும் பாபர் அசாம் மட்டும் இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஒருநாள் போட்டியில் 226 ரன்களும் மற்றும் டெஸ்ட் போட்டியில் 216 ரன்கள் எடுத்திருந்தார். 

இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் “பாபர் அசாம் மிகச் சிறந்த ஆட்டக்காரர். இவர் உலகிலுள்ள மிகச் சிறந்த 5 பேட்ஸ்மேன்கள் வரிசையில் இடம்பெறுவார். இரண்டு வருடங்களுக்கு முன்பு பாபர் அசாம் ஒரு வளர்ந்து வரும் இளம் ஆட்டக்காரராக இருந்தார். ஆனால் தற்போது அவர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு அசாமை கோலியுடன் ஒப்பிட்டது சரிதான்” என கூறியிருந்தார். இதனால் அவரை பலரும் பாபர் அசாமை கோலியுடன் ஒப்பிட்டு கருத்துகளை பகிர்ந்து வந்தனர். சமூக வலைதளங்களிலும் இந்த ஒப்பீடு அதிக அளவில் வலம் வந்தன. 

இந்நிலையில் பாபர் அசாம் தன்னை கோலியுடன் ஒப்பிடவேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாபர் அசாம் “கோலி பல பெரிய சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவர் ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பல முக்கிய ரெக்கார்டுகளை செய்துள்ளார். ஆனால் நான் தற்போது தான் என்னுடைய கிரிக்கெட் பயணத்தை தொடங்கியிருக்கிறேன். நான் சாதிக்கவேண்டியவை நிறையே உள்ளது. இதனால் என்னை யாரும் கோலியுடன் ஒப்பிட்டு பேசவேண்டாம்” எனத் தெரிவித்து இருக்கிறார்.

தற்போது ஒருநாள் மற்றும் 20 ஒவர் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் வீராத் கோலி முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com