அல்லு அர்ஜூனின் "புட்ட பொம்மா" பாடலுக்கு வளைத்து வளைத்து ஆடிய டேவிட் வார்னர் !
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரரான டேவிட் வார்னர் "புட்ட பொம்மா" என்ற தெலுங்கு பாடலுக்கு தன் மனைவியுடன் போட்ட ஆட்டத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் ஐபிஎல் டி20 போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு அமலில் இருப்பதால், இந்தக் காலத்தில் வீட்டிலேயே இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் பலர் சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.
இதில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் கொஞ்சம் ஜாலியாக டிக்டாக்கில் தனது மனைவி குழந்தைகளுடன் நடனமாடிய வீடியோவை வெளியிட்டு வருகிறார். அண்மையில் கூட கேத்ரீன் கைப்பின் பாலிவுட் பாடலுக்கு தனது மகளுடன் நடனமாடி வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்நிலையில் தற்போது தான் விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு, தெலுங்கு பாடல் ஒன்றுக்கு தனது மனைவி கேண்டிஸ் உடன் நடனமாடினார்.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் பூஜா ஹெக்டே நடித்த "அல வைகுந்தப்புரம்லூ" என்ற திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் "புட்ட பொம்மா" என்ற பாடல் மிகவும் புகழ்பெற்றது. மேலும் அந்தப் பாடலில் வரும் நடனம் அனைவரையும் கவர்ந்தது. இப்போது அந்தப் பாடலுக்குதான் வார்னர் தன் மனைவியுடன் நடனமாடியுள்ளார்.
இந்தப் பாடலில் இருவரின் நடனத்தை விடவும், திடீரென வார்னரின் மகள் உள்ளே புகுந்து செய்த குறும்பான சேட்டை, ரசிகர்கள் பலரையும் "வாவ் க்யூட்" என சொல்ல வைத்துள்ளது.