தடுமாறும் ஆஸ்திரேலியா : பந்துவீச்சால் மிரட்டும் இந்தியா
இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் பேட்டிங்கில் விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறி வருகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் விஹாரி 66 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகினார். அதைத்தொடர்ந்து வந்த மாயாங் அகர்வால் 76 (161) ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். மெதுவான ஆட்டத்தை இந்தியர்கள் வெளிப்படுத்திய போதிலும், விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடினார்கள் என்றே இது பார்க்கப்பட்டது.
பின்னர் வந்த புஜாரா 319 பந்துகள் விளையாடி 106 ரன்கள் மட்டுமே எடுத்தார். கேப்டன் விராட் கோலி 82 (204) எடுத்தார். அத்துடன் ரஹானே 34 (76), ரோகித் ஷர்மா 63 (114) மற்றும் கீப்பர் ரிஷப் பண்ட் 39 (76) ரன்கள் எடுத்தனர். இதில் ரோகித் ஷர்மா மட்டும் ஆட்டமிழக்கவில்லை. மொத்தம் 169.4 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் டிக்லர் செய்தது. இந்தியாவின் இந்த ஆட்டம் இரண்டு நாட்களை எடுத்துக்கொண்டது.
இதையடுத்து 2ஆம் நாள் முடியும் நேரத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, நாள் முடிவில் 6 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து 3ஆம் நாளான இன்று பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 33 ஓவர்களில் 89 ரன்கள் எடுத்து அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான மார்கஸ் ஹாரிஸ் 22 (35) மற்றும் ஆரோன் ஃபின்ஞ் 8 (36) ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த உஸ்மான் கவாஜா 21 (32) மற்றும் ஷான் மார்ஸ் 19 (61) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்திய தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.