ஒருநாள் தொடரை வென்றது இந்தியா - நின்று சாதித்த தோனி, ஜாதவ்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமனில் முடிந்தது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வரலாற்று வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரையும் தற்போது 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. தொடரின் முதல் ஆட்டத்தை ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டியை இந்தியா வென்றது. இதனால் இன்று நடந்த மூன்றாவது போட்டி, கோப்பையை வெல்லும் அணியை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி ஆனது.
இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் பீட்டர் ஹண்ட்காம்ப் 58 (63), ஷான் மார்ஸ் 39 (54), உஸ்மான் காவஜா 34 (51) ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் சாஹல் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை சாய்த்தார். அவர் தவிர, புவனேஷ்குமார் மற்றும் முகமது ஷமி தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா 9 (17) ரன்களில் அவுட் ஆனார். பின்னர் வந்த கோலியுடன் கைகோர்த்த தவான் 23 (46) ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து கோலியும் 46 (62) ரன்களில் அரை சதம் அடிக்காமல் அவுட் ஆனார். பின்னர் ஜோடி சேர்ந்த தோனி மற்றும் கேதர் ஜாதவ் இருவரும் இறுதிவரை அவுட் ஆகாமல் 87 (114) மற்றும் 61 (57) ரன்களை எடுத்த வெற்றியை பெற்றுக்கொடுத்தனர். இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.