ஆஸி முதல் நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் !

ஆஸி முதல் நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் !

ஆஸி முதல் நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் !
Published on

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. 

2-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது. போட்டி நடக்கும் ஆப்டஸ் மைதானம் புதிதாகக் கட்டப்பட்டது. இங்கு நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி இது. ஆஸ்திரேலியாவின் 10-வது டெஸ்ட் மைதானமான இதன் பிட்ச், வேகமானதாகவும் பந்து பவுன்ஸ் ஆகும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அந்த அணியில் கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களே இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியில் ரோகித் சர்மா, அஸ்வினுக்குப் பதிலாக விஹாரியும் உமேஷ் யாதவும் சேர்க்கப்பட்டனர். 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பின்ச்சும் ஹாரிஸும் களமிறங்கினர். இருவரும் அடித்து ஆடினார். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரோன் பின்ச் அரைச்சதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 112 ஆக இருந்தபோது பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து அவர் வெளியேறினார். அடுத்து உஸ்மான் கவாஜா வந்தார்.

அவர் 5 ரன் எடுத்திருந்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷான் மார்ஷும் ஹாரிஸும் நன்றாக ஆடிக் கொண்டிருந்தனர். ஹாரிஸ் அபாரமாக ஆடி அரைசதத்தை தாண்டினார். அவர் 70 ரன் எடுத்திருந்த நிலையில் விஹாரி வீசிய பந்தில் துணை கேப்டன் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் விஹாகி, இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com