பங்களாதேஷ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 368 ரன்கள் குவித்துள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 26வது லீக் போட்டி இன்று ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் ஆரோன் ஃபின்ச் இருவரும் அருமையான தொடக்கத்தை தந்தனர். விக்கெட் இழப்பின்றி இந்த ஜோடி நூறு ரன்களை கடந்தது. அணியின் ஸ்கோர் 121 ரன்கள் இருக்கும்போது, ஆரோன் ஃபின்ச் 53 (51) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் வந்த கவாஜாவுடன் சேர்ந்து வார்னர் அதிரடியை தொடங்கினார். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர, வார்னர் சதம் அடித்தார். கவாஜா அரை சதம் போட்டார். இந்த ஜோடியின் அதிரடியால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 300 ரன்களை கடந்தது. பின்னர் 166 (147) ரன்கள் எடுத்திருந்தபோது, விக்கெட்டை இழந்து வார்னர் பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் கவாஜா 89 (72) ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கிடையே வந்த கிளன் மேக்ஸ்வேல் 10 பந்துகளை மட்டுமே சந்தித்து 32 ரன்களை விளாசி, ரன் அவுட் ஆனார்.
அவர் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் ஆஸ்திரேலியா 400 ரன்களை கடந்திருக்கும். இறுதியில் 49 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 368 ரன்கள் குவித்திருந்தது. அந்நேரம் மழை குறுக்கிடவே, போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் போட்டி தொடங்க, 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 381 ரன்கள் குவித்தது. பங்களாதேஷ் அணியில் சவுமியா சர்கார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.