சாம்பியன் பட்டத்தை வெல்ல ஆஸ்திரேலிய அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து!
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸை இழந்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 172 ரன்களை பெற்றுள்ளது.
அந்த அணிக்காக தொடக்க வீரர்களாக இறங்கிய கப்டில் மற்றும் மிட்செல் மீது பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. அரையிறுதியில் மாஸ் காட்டிய மிட்செல் 11 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். பின்னர் களத்திற்கு வந்த அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், கப்டில் உடன் 48 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கப்டில் 35 பந்துகளை சந்தித்து 28 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
8 ஓவர்கள் முடிவில் 40 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் இழந்திருந்த நியூசிலாந்து அடுத்த 7 ஓவர்களில் 74 ரன்களை சேர்த்து ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. 15 ஓவர்கள் முடிவில் 114 ரன்களை எடுத்திருந்தது நியசிலாந்து.
கேப்டன் வில்லியம்சன் 32 பந்துகளில் 51 ரன்களை சேர்த்தார். இது டி20 ஆடவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பதிவு செய்யப்பட்ட அதிவேக அரைசதகமாக அமைந்தது.
17 ஓவர்கள் முடிவில் 144 ரன்களை எடுத்திருந்தது நியூசிலாந்து. இருப்பினும் 18-வது ஓவரை வீசிய ஹேசல்வுட், நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை அப்செட் செய்தார். கிளென் பிலிப்ஸ் மற்றும் வில்லியம்சன் என இருவரை அந்த ஓவரில் வீழ்த்தி இருந்தார் அவர். நான்கு ஓவர்கள் வீசி 16 ரன்களை மட்டுமே எடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆஸ்திரேலிய பவுலர் ஹேசல்வுட். அவரை தவிர மற்ற அனைத்து ஆஸ்திரேலிய பவுலர்களும் சராசரியாக ஓவருக்கு 6.50 ரன்களுக்கு மேல் ரன்களை கொடுத்திருந்தனர். அதில் ஸ்டார்க் 60 ரன்களை வாரி கொடுத்திருந்தார்.
48 பந்துகளில் 85 ரன்களை சேர்த்து கேன் வில்லியம்சன் அவுட்டானார். அவரது இன்னிங்ஸில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் எடுத்தால் டி20 உலகக் கோப்பையை வெல்லும்.

