“இது ஆடுகளமா இல்லை தார் ரோடா?”-விமர்சிக்கப்படும் பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானம்
24 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட உள்ளது. இந்த பயணத்தில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் இரு அணிகளும் விளையாடுகின்றன. நாளை ராவல்பிண்டியில் உள்ள பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளன. இந்நிலையில் இந்த மைதானத்தின் ஆடுகளப் படம் வெளியாகி இருந்தது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயன் ஆகியோர் ஆடுகளத்தை பார்வையிட்டுள்ளனர். அந்த புகைப்படம் தான் வெளியாகி உள்ளது. அதில் ஆடுகளம் பார்க்க அறவே புற்கள் ஏதுமில்லாதது போல இருக்கிறது. ஆசிய கண்டத்தின் பாரம்பரிய வழக்கப்படி ஆடுகளம் மிகவும் ஃபிளாட்டாக அமைக்கப்பட்டுள்ளது. அதனால் ஆடுகளம் போட்டி நடைபெறும் முதல் மூன்று நாட்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும். அதற்கடுத்த நாட்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறிவிடும் என்றும் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட ஆடுகளத்தை கவனித்த ஆஸ்திரேலிய ஊடகங்கள் சாலைகளில் வழக்கமாக இருக்கும் தடுப்புக் கட்டை, டிராபிக் சிக்னல், வழிகாட்டி மாதிரியானவற்றை அந்த படத்தில் சேர்த்து “பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஆடுகளத்தின கன்டீஷன் இது” என கேப்ஷன் கொடுத்துள்ளன. அதை கவனித்த நெட்டிசன்கள் “இது ஆடுகளமா இல்லை தார் ரோடா?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆடுகளம் அமீரகத்தில் இருப்பது போல இருப்பதாக ஆஸி. வீரர் நாதன் லயன் தெரிவிவித்துள்ளார். இருந்தாலும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மாதிரியான நாடுகளில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் போது மட்டும் ஏனோ அயலக நாடுகள் ஆடுகளத்தை விமர்சிக்கின்றன.