பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: 580 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலிய அணி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, 580 ரன்கள் குவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனில் நடக்கிறது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 240 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஹசல்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 580 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 340 ரன்கள் முன்னிலை பெற்றது. டேவிட் வார்னர் 154 ரன்களும் லபுஸ்சேக்னே 185 ரன்களும் வேட் 60 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் யாஷிர் ஷா 4 விக்கெட்டுகளையும் ஷகின் ஷா அப்ரிதி, ஹரிஸ் சோஹைல் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, கேப்டன் அசார் அலி விக்கெட்டை ஆரம்பத்தி லேயே இழந்தது. அடுத்த சில நிமிடங்களிலேயே ஹரிஸ் சோஹைலும் ஆட்டமிழந்தார். இவர்கள் இருவர் விக்கெட்டையும் ஸ்டார்க் கைப்பற்றினார். அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆடி வருகிறது.