விக்கெட்டுகளை குவித்த க்ருனால் - இந்தியாவிற்கு 165 இலக்கு
இந்தியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் ஃபிஞ்ச் மற்றும் ஆர்சி ஷார்ட் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 28 (23) ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஃபிஞ்ச் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஆர்சி ஷார்ட்டும் 33 (29) ரன்களில் அவுட் ஆனார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் யாரும் எதிர்பாராத விதமாக குருனல் பாண்டியா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஏற்கனவே நடைபெற்றுள்ள இரண்டு டி20 போட்டிகளில் ஒன்றில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. மற்றொரு போட்டி மழையால் தடையானது. இதனால் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. எனவே இந்தியா கோப்பையை வெல்வதற்கான சாத்தியம் அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை இந்தியா சமன் செய்யமுடியும். தற்போது இந்திய அணி இலக்கை எதிர்த்து பேட்டிங் செய்து வருகிறது.