"விளையாட்டே எனக்கு ஆரோக்கியம்" தடகளத்தில் அசத்தும் 102 வயது தாய்லாந்து தாத்தா
தாய்லாந்து நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற 26-வது தாய்லாந்து மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற சவாங் ஜான்பிரம் (Sawang Janpram) என்ற 102 வயது தடகள வீரர் 100 மீட்டர் தூரத்தை 27.08 நொடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். அதன் பலனாக அவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. மேலும் 100 வயதை கடந்த தடகள வீரர்களில் இது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
100 முதல் 105 வயது வரை உள்ள தடகள வீரர்களுக்காக நடத்தப்பட்ட அனைத்து ஈவெண்டிலும் அவர் தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் நான்கு முறை பங்கேற்று விளையாடி உள்ளார் அவர். ஓட்டம், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் மாதிரியான தடகள பிரிவில் அவர் விளையாடி உள்ளதாக தெரிகிறது.
70 வயதான தனது மகளுடன் அவர் வசித்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது. தினந்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்வது, வீட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள மரத்திலிருந்து உதிரும் இலையை சேகரித்து, கொல்லைப் புறத்தில் கொட்டுவது மாதிரியான பணிகளை அவர் செய்து வருவதாக தெரிகிறது. மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் 2 நாட்களுக்கு ஒருமுறை என மகளுடன் பயிற்சி மேற்கொண்டுள்ளார் அவர்.
“விளையாட்டில் ஈடுபடுவது என்னை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. அதோடு பயிற்சி செய்வது பசியை தூண்டுகிறது. அதனால் நன்றாக சாப்பிடவும் முடியும்” என சவாங் ஜான்பிரம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Source: Reuters