
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் மூன்று தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. 1,500 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதலில் 45 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா பதக்கங்களை வென்றுள்ளது. சாப்ளே தங்கம் வென்று அசத்தினார். இவர் 8 நிமிடம் 19 விநாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார்.
1,500 மீட்டர் ஓட்டம் பெண்கள் பிரிவில் 4 நிமிடம் 12 புள்ளி 74 விநாடிகளில் இலக்கை கடந்து, இந்தியாவின் ஹர்மிலன் பைன்ஸ் வெள்ளி பதக்கம் வென்றார். அதேபோல், 1,500 மீட்டர் ஓட்டம் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் அஜய்குமார் சரோஜ் வெள்ளி பதக்கம் வென்றார். மற்றொரு வீரரான ஜின்சன் ஜான்சன் வெண்கலம் வென்றார். 1962 ஆம் ஆண்டுக்கு பிறகு 1,500 மீட்டர் ஆண்கள் பிரிவில் இந்தியாவில் 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் தஜிந்தர் பால் சிங் தூர், தங்கம் வென்றார். 20 புள்ளி 36 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து தங்கப் பதக்கத்தை அவர் தட்டிச் சென்றார். கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தஜிந்தர் பால் சிங் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீளம் தாண்டுதல் போட்டியில் 1978ஆம் ஆண்டுக்கு பின் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் 8 புள்ளி 19 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார். 50 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் வெண்கலம் வென்றார். உலக சாம்பியனான இவர், அரையிறுதி போட்டியில் தாய்லாந்து வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.
கோல்ஃப் பிரிவில் மகளிர் தனிநபர் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் வெள்ளிப்பதக்கம் வென்றார். 271 புள்ளிகள் பெற்ற அதிதி அசோக், 2ஆம் இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் ஆசிய விளையாட்டி போட்டியில் கோல்ப் பிரிவில் முதல்முறையாக பதக்கம் வென்றவர் என்ற பெருமையை அதிதி பெற்றுள்ளார்.
துப்பாக்கிச்சூடுதலில் ஆண்கள் டிராப் 50 குழு பிரிவில், இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. டெரியஸ், சொரவர் சிங், பிரித்வி ராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 361 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்து தங்கம் வென்றுள்ளது. இதே போன்று மகளிர் டிராப் 50 குழு பிரிவில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. இறுதிப் போட்டியில் மணீஷாசிங், பிரீத்தி ராஜக், குமாரி ராஜேஸ்வரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 2ஆம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.
வட்டு எறிதலில் 58 புள்ளி 62 மீட்டர் தூரம் வீசி, இந்தியாவின் சீமா புனியா வெண்கலம் வென்றார். இவர், ஏற்கனவே 2006, 2014 ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றிருந்தார்.