ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 9வது தங்கம்
இந்தோனிஷியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 10வது நாளான இன்று, ஆடவர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் மஞ்சித் சிங் தங்கம் வென்றார். இதே போட்டியில், இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றார்.
முதல் இடம் பிடித்த மஞ்சித் சிங் ஒரு நிமிடம் 46 நொடிகளில் பந்தைய தூரத்தை கடந்தார். இரண்டாம் இடம் பிடித்த ஜின்சன் ஜான்சனும் அதேபோல் ஒரு நிமிடம் 46 நொடிகளில் பந்தைய தூரத்தை கடந்தார். ஆனால் இருவருக்கும் இடையே சில மைக்ரோ நொடிகள் தான் வித்தியாசம். மஞ்சித் சிங் 1:46:15, ஜின்சன் ஜான்சன் 1:46:35 நொடிகளில் பந்தைய தூரத்தை கடந்தனர்.
அதேபோல், குரோஷ் எனப்படும் தற்காப்பு போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி, வெண்கலம் என இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்தியாவின் பிங்கி பல்கரா வெள்ளிப் பதக்கமும், மலபிரபா எல்லப்பா வெண்கல பதக்கமும் வென்றனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 9 தங்கம், 18 வெள்ளி, 22 வெண்கலம் என 49 பதக்கங்களுடன் 8வது இடத்தில் உள்ளது.