இந்தியாவிடம் சரணடைந்த பாகிஸ்தான் - பாபர் அசாம் செய்த அந்த 3 தவறுகள் என்ன?

இந்தியாவிடம் சரணடைந்த பாகிஸ்தான் - பாபர் அசாம் செய்த அந்த 3 தவறுகள் என்ன?

இந்தியாவிடம் சரணடைந்த பாகிஸ்தான் - பாபர் அசாம் செய்த அந்த 3 தவறுகள் என்ன?
Published on

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி. 148 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 2 பந்துகளை மீதம் வைத்து 19.4 ஓவர்களில் வெற்றி கண்டது.  இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் தோல்விக்கு 3 முக்கிய காரணங்களை ஆராய்வோம்.

பவுலிங் திட்டமிடலில் சொதப்பல்

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 5 பவுலர்களை மட்டுமே நம்பி களமிறங்கியது. இதில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்கள் அடங்குவர். இதில் 15 ஓவர்களுக்குள் 2 ஸ்பின்னர்களும் தங்களது 4 ஓவர்களையும் வீசியிருக்க வேண்டும். ஆனால் ஜடேஜா இருந்ததால் அவர் அவுட் ஆகும்வரை ஸ்பின்னர்களின் ஓவரை தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தார் கேப்டன் பாபர் அசாம். ஜடேஜாவை வீழ்த்துவதற்காக அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களையும் பாபர் முன்கூட்டியே பயன்படுத்தினார். ஆனால் கடைசி ஓவர் வரை ஜடேஜா நிலைத்து நின்றுவிட்டார். இதனால் வேறு வழியின்றி கடைசி ஓவரை ஸ்பின்னர் முகமது நவாஸ்க்கு கொடுத்தே தீர வேண்டிய கட்டாயம் உருவானது.  ஹர்திக் பாண்டியா சுழற்பந்துகளை சிக்ஸர்களாக விளாசக்கூடிய திறமை படைத்தவர். அதன் பலனாக கடைசி ஓவரில் அசால்ட்டாக சிக்ஸர் விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.

அதனால்தான் இந்த ஆட்டத்திற்கு பிறகான பேட்டியில் பேசிய ஹர்திக் பாண்டியா, ''கடைசி ஓவரை முகமது நவாஸ் வீசுவார் என்பது தெரியும். கடைசி ஓவரில் எங்களது வெற்றிக்கு 7 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. ஒருவேளை வெற்றிக்கு 15 ரன்கள் தேவையாக இருந்திருத்தாலும் அதனை அடித்து இருப்பேன்'' என கூலாக சொன்னார். டி20 கிரிக்கெட்டில் ஸ்பின்னர்களை கடைசி ஓவரில் வீசவைப்பது சரியாக இருக்காது. ஆனால் பாபர் அந்த தவறை செய்தார்.

தவறான பேட்டிங் ஆர்டர்

பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு மற்றொரு காரணமாக தவறான பேட்டிங் ஆர்டரும்தான் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் ஓபனிங் அல்லாமல் 3வது இடத்தில் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதேபோல் ஃபகார் ஜமான் - முகமது ரிஸ்வான் ஆகியோர்தான் தொடக்க ஜோடியாக களமிறங்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், இந்த பேட்டிங் ஆர்டரை பாகிஸ்தான் அணி முயற்சிக்கவில்லை. இதனால் இந்த போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சை தாக்கு பிடிக்காமல் பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் திணறியது. முதல் 6 ஓவர்களில் 19 டாட் பால்கள் பதிவாகியிருக்கிறது. ரிஸ்வான் 45 பந்துகளில் 45 ரன்கள் எடுத்ததால் எந்தப் பயனும் இல்லை. ஆசிப் அலிக்கு முன்பு ஷதாப் கான் பேட்டிங் அனுப்பப்பட்டதும் தவறு என்கின்றனர் விமர்சகர்கள்.

ஷார்ட் பிட்ச் பலவீனம்

பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன்களுக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதில் சிரமம் உள்ளது. அதன் காரணமாகவே அவர்களால் பவுன்சர் பந்துகளை அடிக்க முடியாமல் போகிறது. இந்த பலவீனம் தற்போது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியாவின் ஷார்ட் பிட்ச் பந்துகளில் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆட்டமிழந்தனர். குஷ்தில் ஷா, ஃபகர் ஜமான் ஆகியோரும் இந்திய பந்துவீச்சாளர்களின் பவுன்சர்களை எதிர்கொள்ள தடுமாறினார்.

இதையும் படிக்க: 'பாசத்துல நம்மள மிஞ்சிருவாங்க போலையே' -இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய ஆப்கன் ரசிகர்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com