“இறுதி ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் இதை செய்யுங்கள்” - தவான் ஆசை
ஆசியக் கோப்பை 2018 கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்கேற்றன. 6 அணிகளில் 4 அணிகள் மட்டும் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றதால் இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய இரு அணிகள் வெளியேறின. இதைத்தொடர்ந்து நடைபெற்ற ‘சூப்பர் 4’ ஆப்கானிஸ்தான் மற்றும் பகிஸ்தான் அணிகள் வெளியேறியுள்ளன. இதில் பங்களாதேஷிடம் தோற்று பாகிஸ்தான் வெளியேறியது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நாளை இந்தியா-பங்களாதேஷ் இடையே இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி ஆசியக் கோப்பையை வெல்லும். இதற்கு முன்னரே ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா-பங்களாதேஷ் அணிகள் மோதியுள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 173 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இந்திய அணி சார்பில் புவனேஷ்குமார் மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 36.2 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. இது ஒரு எளிமையான வெற்றியாகும். இந்நிலையில் தான் நாளை இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக கூறும் கிரிக்கெட் வல்லுநர்கள், இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மோதியிருந்தால், யார் வெற்றி பெறுவார்கள் என உறுதியாக சொல்ல முடியாது. ஏனென்றால் ஏற்கனவே இந்தியாவிடம் இரண்டு முறை தோற்ற பாகிஸ்தான், இறுதிப்போட்டியில் தீவிர ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கும், அதனால் இந்தியா முதலில் பேட்டிங் செய்திருந்தால் வெற்றி கடினமானதாக இருந்திருக்கும் என்கின்றனர். ஆனால் தற்போது பாகிஸ்தானையே பங்களாதேஷ் வெற்றி பெற்று வருவதால், இந்திய அணி மிக கவனத்துடன் விளையாடும். இதனால் இறுதிப்போட்டியிலும் வெற்றியை எளிமையாக இந்திய அணி பெறலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இறுதிப்போட்டி தொடர்பாக பேசியுள்ள ஷிகர் தவான், “கடந்த போட்டியில் நானும், ரோகித் ஷர்மாவும் ஓய்வில் இருந்தோம். அதன்மூலம் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இது அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் திறமையான ஆட்டத்தை இந்தத் தொடரில் வெளிப்படுத்துகின்றனர். அவர்கள் இறுதிப்போட்டியிலும் அந்தச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்” என்று விருப்பம் தெரிவித்துள்ளார். தவான் கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய ‘சூப்பர் 4’ ஆட்டத்தில் 114 (100) ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.