அடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்
இந்திய அணியில் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். நீண்ட காலம் கேப்டனாக இருந்த தோனி 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்தும், கடந்த ஆண்டு 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார். தன்னுடைய கேப்டன் பொறுப்பை அவர் விராட் கோலியிடம் ஒப்படைத்தார்.
விராட் கோலியிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்த போது, களத்திலும் பயிற்சியின் போதும் அவர் இரண்டாவது கேப்டனாகவே செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்ற நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இப்பொழுது விளையாடி வருகிறார். இந்தப் போட்டிகளின் போது இக்கட்டான நேரங்களில் விராட் கோலிக்கு தோனி ஆலோசனை கூறுவார். அதற்கு நல்ல பலன்களும் கிடைக்கும்.
இந்நிலையில், ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இப்போது நடைபெற்று வருகிறது. ஆசியக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தத் தொடரிலும் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு மகேந்திர சிங் தோனி உதவி செய்து வருகிறார். ஹாங்காங் உடனான முதல் போட்டியில் நீண்ட நேரம் ஆகியும் விக்கெட் விழாத நிலையில், ரோகித் சர்மாவை பீல்டிங்கில் நிற்க வைத்துவிட்டது கொஞ்ச நேரம் தோனி எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார். அதன் பின்னர் விக்கெட்கள் மளமளவென சரிந்தது. பேட்டிங்கில் தோனி சொதப்பினாலும், இந்திய அணியின் வெற்றிக்கு இந்த வகையில் தோனி தனது பங்களிப்பை செலுத்தினார்.
அதேபோல், வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியிலும் தோனி ஒரு மேஜிக் செய்தார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது. முதலில் விளையாடிய வங்கதேசம் அணி 16 ரன்னில் 2 விக்கெட்களை இழந்தது. 5.1 ஓவரிலே இரண்டு விக்கெட்கள் வீழ்ந்துவிட்டது. அடுத்த மூன்று ஓவர்களில் விக்கெட் விழாததால் ஸ்பின்னர்கள் பந்துவீச அழைக்கப்பட்டனர். 9வது ஓவரை சாஹல் வீச, 10வது ஓவரை ஜடேஜா வீச வந்தார். களத்தில் ஷகிப் அல் ஹாசன், முஷ்பிகுர் ரஹிம் இருந்தனர்.
முதல் பந்தில் ஒரு ரன் எடுக்க, இரண்டு பந்தை ‘நோ’ பாலாக வீசினார் ஜடேஜா. அதோடு, அடுத்த இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை ஷகிப் அல் ஹாசன் அடித்தார். இதனையடுத்து, கீப்பிங் செய்து கொண்டிருந்த தோனி ரோகித் சர்மாவை அழைத்தார். அவரிடம் சிலிப் திசையில் நின்று கொண்டிருந்த ஷிகர் தவானை லெக் சைடில் நிற்க வைக்க சொன்னார். அதன்படி, பீல்டிங் மாற்றப்பட்டது.
பீல்டிங் மாற்றிய அடுத்த பந்திலேயே ஷகிப் அடிக்க அதனை லெக் சைடில் நின்ற தவான் அழகாக பிடித்தார். இதனால், 42 ரன்னில் வங்கதேசம் அணி தனது மூன்றாவது விக்கெட்டை இழந்தது. 12 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்து ஷகிப் அல் ஹாசன் அவுட் ஆனார்.
தோனி ஆலோசனையின் பீல்டிங் மாற்றப்பட்டு, அடுத்த பந்திலேயே விக்கெட் வீழ்ந்ததை ரசிகர்கள் கவனித்து விட்டனர். இதனை ட்விட்டரில் ரசிகர்கள் பலரும் பதிவிட்டுள்ளனர். ஷிகர் தவன் பீல்டிங் மாற்றப்பட்ட போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்கள் கமண்ட் செய்தனர். ‘ஒரு லீடர் எப்பொழுதும் லீடர் தான்’ ‘இப்பொழுது தெரிகிறதா தோனி ஏன் சிறந்த கேப்டன் என்று’ என சிலாகித்துள்ளனர்.
ரவிசாஸ்திரியை தூக்கிவிட்டு தோனியை தலைமை பயிற்சியாளராக பிசிசிஐ நியமிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். ‘தோனி கேப்டன்ஷியை கைவிட்டிருக்கலாம்..ஆனால் கேப்டன்ஷி அவரை கைவிடுவதாக இல்லை’ என ஒரு ரசிகர் கூறியுள்ளார்.