இலங்கையை மிரட்டிய முஸ்ஃபிகுர் ரஹ்மான் - மீண்டும் ஜொலித்த மலிங்கா

இலங்கையை மிரட்டிய முஸ்ஃபிகுர் ரஹ்மான் - மீண்டும் ஜொலித்த மலிங்கா

இலங்கையை மிரட்டிய முஸ்ஃபிகுர் ரஹ்மான் - மீண்டும் ஜொலித்த மலிங்கா
Published on

ஆசியக் கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அணி 261 ரன்கள் எடுத்துள்ளது. 

14-வது ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் அணிகள் பங்கேற்கின்றன. இன்று தொடங்கிய முதல் போட்டியில் இலங்கை-வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

தொடக்கமே வங்கதேசம் அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. ஒரு ரன் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டை அந்த அணி இழந்தது. லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹாசன் இருவரும் டக் அவுட் ஆனார்கள். இந்த இரண்டு விக்கெட்டையும் மலிங்கா வீழ்த்தினார். அதோடு, தமிம் இக்பால் ரிட்டையர் ஹட் மூலம் வெளியேறினார். இதனால், கிட்டத்தட்ட மூன்று விக்கெட்கள் இழந்த நிலைக்கு வங்கதேசம் சென்றது. அப்போது, முஸ்ஃபிகுர் ரஹ்மானுடன், முகமது மிதுன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதில், மிதுன் சற்றே வேகமாக ரன் அடித்தார். 

இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் வங்கதேசம் அணி சரிவில் இருந்து மீண்டது. இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு நூறு ரன்களுக்கு மேல் சேர்த்தது. வங்கதேசம் அணி 134 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சிறப்பாக விளையாடி வந்த மிதுன் 63(68) ரன்னில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை தொடர்ந்து வங்கதேசம் அணியின் சரிவு தொடங்கியது. அடுத்து வந்த யாரும் ரன்களை சேர்க்கவில்லை. விக்கெட்கள் வீழ்ந்த வண்ணம் இருந்தது. விக்கெட் ஒருபுறம் வீழ்ந்தாலும், மறுபுறம் தனி ஆளாக முஸ்ஃபிகுர் ரஹ்மான் ரன்களை சேர்த்தார். அவர் 123 பந்தில் சதம் அடித்தார்.

இறுதியில், முஸ்ஃபிகுர் சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக விளாசினார். குறிப்பாக அவர் சதம் அடித்த பின்னர் இலங்கை பந்துவீச்சாளர்களை ஒரு கை பார்த்தார். இதனால், ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. கடைசி விக்கெட்டாக முஸ்ஃபிகுர் வீழ்ந்தார். அவர் 150 பந்தில் 144 ரன்கள் அடித்தார்.

வங்கதேசம் அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 261 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் மலிங்கா 10 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். 262 ரன்கள் என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com