நான்காவது டெஸ்ட்டில் ஆடுவாரா? அஸ்வினுக்கு தொடர்ந்து சிகிச்சை!
சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் காயமடைந்து இருப்பதால் அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்தும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 30-ம் தேதி சவுதாம்டனில் நடக்கிறது. இந்நிலையில் இந்தப் போட்டியில் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் ஆடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.
இங்கிலாந்து தொடர் தொடங்குவதற்கு முன்பு எஸ்செக்ஸ் அணியுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தின்போதே அஸ்வின் வலது கையில் காயமடைந்திருந்தார். காயம் பெரிதாகிவிடக் கூடாது என்பதற்காக பயிற்சி ஆட்டத்தில் அவர் ஈடுபடவில்லை.
பின்னர் குணமாகி ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. அந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் காயத்துடனேயே ஆடினார். அவர் வலியில் தவிப்பதையும் பார்க்க முடிந்தது. இதனால் அவர் அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆடுவாரா என்பது கேள்விக் குறியாகி உள்ளது.
Read Also -> கைமாறியது, இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரம் !
இதுபற்றி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும்போது, ‘அடுத்த போட்டிக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அதற்குள் அவர் குணமாகிவிடுவார் என்று நம்புகிறோம். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் அவர் குணமாகி வருகிறார்’ என்றார்.
இருந்தாலும் 28-ம் தேதி சவுதாம்டனில் நடக்கும் வலை பயிற்சியின்போதுதான் அஸ்வின் உடல் நலம் பற்றிய முழு விவரமும் தெரியவரும். அதற்கு பிறகே அவர் அணியில் சேர்க்கப்படுவாரா இல்லையா என்று முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.