சென்னை டெஸ்ட்: வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய அஸ்வின்!

சென்னை டெஸ்ட்: வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய அஸ்வின்!
சென்னை டெஸ்ட்: வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய அஸ்வின்!
Published on

சென்னையில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தின் முதல் பந்திலேயே அஸ்வின் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டம் சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 190.1 ஓவர்களுக்கு 578 ரன்களை குவித்தது. தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை மூன்றாம் நாளான நேற்று விளையாடத் தொடங்கியது. ரோகித், கில், கோலி, ரஹானே என இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியது அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

பின்னர் களம் இறங்கிய பண்டுடன் புஜாரா கூட்டு சேர, இருவரும் 119 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். புஜாரா 73 ரன்களிலும், பண்ட் 91 ரன்களிலும் பெவிலியன் திரும்ப 6 விக்கெட் இழந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 257 ரன்களை குவித்தது. வாஷிங்டன் சுந்தரும், அஷ்வினும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணிக்காக அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் டாம் பெஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய 321 ரன்கள் பின்தங்கியது.

இந்நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடிய வாஷிங்டன் சுந்தர் அரை சதமடித்தார். அஸ்வின் அவருக்கு உறுதுணையாக விளையாடினார். ஆனால் 31 ரன்களில் அஸ்வின் அவுட்டானது அணிக்கு பின்னடைவாக அமைந்தது. அதன் பின்பு வந்த ஷபாஸ் நதீம், இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் மட்டும் அற்புதமாக விளையாடிய இறுதி வரை ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் எடுத்தார். இந்தியா 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலையான 241 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக பர்ன்ஸ் மற்றும் டோம் சிப்லே களமிறங்கினர். இந்தியத் தரப்பில் அஸ்வின் முதல் ஓவரை வீசினார். இதில் முதல் பந்தை எதிர்கொண்ட் பர்ன்ஸ் ஸ்லிப்பில் பீல்டிங் செய்திருந்த ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இப்போது உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 1 ரன் எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com