’பந்துவீசுறதுக்கு முன் பேட்ஸ்மேன் க்ரீஸை தாண்டினா இப்படி செய்யுங்க’- அஷ்வின் சொன்ன யோசனை
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கு இடையே இருக்கும் ஏற்றத்தாழ்வினை சமன் செய்ய தனது யோசனையை தெரிவித்துள்ளார்.
ஷார்ட்டர் பார்மட் கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் கிரீஸை தாண்டி பந்து வீசுவதை தொழில்நுட்பத்தின் உதவியோடு கவனித்து ஆடு களத்தில் இல்லாத மூன்றாவது அம்பயரும் அதற்கு ‘நோ பால்’ கொடுக்கலாம் என அண்மையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்திருந்தது.
அதனையடுத்து அஸ்வின் தனது கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
“பந்து வீசப்படுவதற்கு முன்பு நான்-ஸ்ட்ரைக்கர் பேட்ஸ்ட்மேன் கிரீஸை விட்டு வெளியேறி ரன் எடுக்க முற்பட்டால் அதனை தொழில்நுட்பத்தின் உதவியோடு அம்பயர்கள் கண்டறிந்து அந்த பந்தில் அடித்த ரன்களை ஸ்கோரில் சேர்க்க கூடாது. அப்படியில்லை என்றால் அந்த பந்தை பந்து வீச்சாளருக்கு சாதகமாக ‘ப்ரீ பால்’ என அறிவித்த விடலாம். இதன் மூலம் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கு இடையே இருக்கும் ஏற்றத்தாழ்வினை சமன் செய்யலாம்” என தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஐ.பி.எல் சீசனில் நான்-ஸ்ட்ரைக்கராக இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டனாக இருந்த அஷ்வின் ‘மன்கட்’ முறையில் பந்து வீசுவதற்கு முன்பே அவுட் செய்தார். அது கிரிக்கெட் உலகில் விவாதத்தை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.