ஐசிசி நம்பர் 1 பவுலரானார் அஸ்வின்! பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி எந்த இடம் தெரியுமா?

ஐசிசி நம்பர் 1 பவுலரானார் அஸ்வின்! பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி எந்த இடம் தெரியுமா?
ஐசிசி நம்பர் 1 பவுலரானார் அஸ்வின்! பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி எந்த இடம் தெரியுமா?

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வெற்றிபெற்ற நிலையில், ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் புதிய ரேங்கிங்கை எட்டியுள்ளனர்.

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரை 2-1 என வெற்றிபெற்ற இந்திய அணி, தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் வெற்றிபெற்றதற்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா சந்திக்கவிருக்கிறது. இந்த தொடரில் அபாரமான பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள், அதற்கு பிறகு ஐசிசி வெளியிட்டிருக்கும் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 டெஸ்ட் பவுலரான ரவிச்சந்திரன்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவிச்சந்திரன் அஸ்வின், 2 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி மொத்தமாக 25 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பார்டர் கவாஸ்கர் தொடரில் நான்காவது போட்டிக்கு முந்தைய ஐசிசி தரவரிசையில், இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் நம்பர் 1 பவுலர் இடத்தை பகிர்ந்து கொண்டிருந்தார் அஸ்வின். ஆனால் நடந்து முடிந்த 4ஆவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டை கைப்பற்றிய நிலையில், ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி உலகத்தின் நம்பர் 1 டெஸ்ட் பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் அஸ்வின். அஸ்வின் 869 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடிக்க 10 புள்ளிகள் வித்தியாசத்தில் ஆண்டர்சன் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளார்.

4ஆவது இடத்திற்கு முன்னேறிய அக்சர் பட்டேல்!

நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் டிரோபியில் 2 விக்கெட்டுகளை மட்டுமே அக்சர் பட்டேல் கைப்பற்றியிருந்தாலும், பேட்டிங்கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உஸ்மான் கவாஜா 333 ரன்களிலும், விராட் கோலி 297 ரன்களிலும் முதல் இரண்டு இடத்தை பிடித்திருக்க, 264 ரன்களுடன் மூன்றாவது அதிக ரன்கள் எடுத்த வீரராக அக்சர் பட்டேல் இருக்கிறார்.

இந்நிலையில் ஆல் ரவுண்டருக்கான டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 4ஆவது இடத்திற்கு சென்றுள்ளார் அக்சர் பட்டேல். மேலும் பேட்டிங் தரவரிசையில் 44ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் அக்சர்.

7 இடங்கள் முன்னேறி 13 இடத்தை பிடித்த விராட் கோலி!

ஒரு காலத்தில் ஒருநாள், டெஸ்ட் டி20 என மூன்றிலும் நம்பர் 1 வீரராக ஜொலித்துக்கொண்டிருந்த விராட் கோலி, அவரது ஃபார்மை இழந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 இடங்களில் கூட இல்லாமல் வெளியேறினார்.

இந்நிலையில் கிட்டத்தட்ட 3.5 வருடங்களுக்கு மேல் டெஸ்ட் போட்டிகளில் சதத்தையே பதிவு செய்யாதிருந்த விராட் கோலி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் தன்னுடைய சத வறட்சியை முடிவுக்கு கொண்டுவந்தார். இந்நிலையில் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 186 ரன்கள் குவித்த விராட் கோலி, ஐசிசி பேட்டிங் தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி 13ஆவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com