இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் ஸ்மித் இரட்டை சதம் விளாசினார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஆஷஸ் டெஸ்ட் தொடரான இதன் மூன்றவது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடந்து வருகிறது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 403 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மலன் 140 ரன்களும் பர்ஸ்டோவ் 119 ரன்களும் குவித்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது ஆஸ்திரேலிய அணி. பென்கிராப்ட் 25 ரன், வார்னர் 22 ரன், கவாஜா 50 ரன், மார்ஷ் 28 ரன் எடுத்து வெளியேற கேப்டன் ஸ்மித் சதமடித்தார். இது அவருக்கு 22-வது டெஸ்ட் சதம். அதோடு தொடர்ந்து நான்கு வருடங்களாக டெஸ்ட்டில் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த இரண்டாவது கிரிக்கெட் வீரர் ஆகி இருக்கிறார்.
தொடர்ந்து அபாரமாக ஆடிய அவர் இரட்டை சதம் அடித்தார். அவருடன் ஆடிய மைக்கேல் மார்ஷும் சதம் அடித்தார். மதியம் 1.35 மணி நிலவரப்படி அந்த அணி, முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 460 ரன்கள் குவித்தது.