''காத்திருந்து... காத்திருந்து...'' - இந்தியாவின் முதல் போட்டிக்காக மீம்ஸ் கேலி செய்யும் கிரிக்கெட் ரசிகர்கள்
உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் போட்டிக்காக காத்திருக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை பதிவிட்டுவருகின்றனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் தொடங்கியது. இந்தத் தொடரில் இந்திய, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட 10 நாடுகள் கலந்துகொண்டுள்ளன. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஜூன் 5ஆம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் முதல் போட்டிக்கு இவ்வளவு தாமதம் ஆனது குறித்து இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்கள் ஆதங்கத்தை மீம்ஸ்களாக பதிவிட்டுவருகின்றனர். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய தவிர மற்ற அணிகள் அனைத்தும் தங்களின் முதல் போட்டியை விளையாடிவிட்டனர். இதனை புள்ளிப்பட்டியலை சுட்டு காண்பித்தும், கோழி முட்டையிடுவதற்காக காத்திருக்கும் வகையிலும் மீம்ஸ்களை பதிவிட்டுவருகின்றனர்.
உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றது. அதில் முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. இரண்டு பயிற்சி ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.