இங்கிலாந்தில், இந்திய அணியுடன் சச்சின் மகனுக்கும் பயிற்சி
இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் சேர்ந்து சச்சின் டெண்டுல்கரின் மகனுக்கும் பயிற்சி அளிக்கப்ப்ட்டு வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட அங்கு சென்றுள்ளது. அதற்கு முன் அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான பயிற்சி அங்கு தொடங்கியுள்ளது. இந்தப் பயிற்சியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூனும் பங்கேற்றுள்ளார்.
சச்சின் மகன் அர்ஜூன், இடது கை வேகப்பந்து வீச்சாளர். அதோடு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். இவர் முதன்முறையாக 19 வயதிற்குட் பட்டோ ருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த அணி ஜூலையில் இலங்கை சென்று விளையாட இருக்கிறது. அதற்காக இப்போதே பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.
இங்கிலாந்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி நேற்று தொடங்கியது. அதில் அர்ஜூனும் பந்துவீசி, பயிற்சியில் ஈடுபட்டார். இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அவருக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்தப் பயிற்சியை முடித்துவிட்டு இந்தியா திரும்பும் அவர், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபடுகிறார். தமிழக முன்னாள் வீரர் டபிள்யூ வி ராமன், சனத் குமார் பயிற்சி அளிக்கின்றனர்.