39 வயதிலும் மேஜிக் செய்த மெஸ்ஸி.. ஒரே போட்டியில் இத்தனை சாதனையா.? Number 1 இடத்தில் மெஸ்ஸி !
ஃபிபா கால்பந்து தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடந்த முதல் போட்டியில் பிரான்ஸ் அணி 3-1 என்ற கணக்கில் செனக்கல் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe ) இரண்டு கோல்களை அடித்தார். இதன் மூலம் உலககோப்பையில் 14 கோல்களோடு மெஸ்ஸி அடித்த 13 கோல்கள் என்ற எண்ணிக்கையை தாண்டினார்.
இந்த போட்டியைத் தொடர்ந்து காலை 6.30 மணிக்கு நடந்த மற்றொரு போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி அல்ஜீரியா அணியை எதிர்கொண்டது. உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் எம்பாப்பே மெஸ்ஸியை முந்தியதால் இந்த போட்டியில் மெஸ்ஸி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
கால்பந்து தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் அர்ஜென்டினா அணி ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. தொடக்கத்திலேயே அர்ஜென்டினாவில் மெஸ்ஸி மற்றும் அல்ஜீரியா அடித்த கோல்கள் ஆப் சைட் (Off side ) எனக் கூறி மறுக்கப்பட்டது.
இந்த சூழலில் ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் பெனால்டி பாக்ஸ்க்கு வெளியே இருந்து மெஸ்ஸி ஒரு அபாரமாக ஷாட் மூலம் அணிக்கு முதல் கோலை அடித்தார். இதனால் முதல் பாதியில் அர்ஜென்டினா அணி 1-0 என முன்னிலை பெற்றது. பின் இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில், 60 வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் கீப்பரை ஏமாற்றி மற்றொரு கோல் அடித்தார். அதோடு நிற்காத மெஸ்ஸி 76-வது நிமிடத்தில் மூன்றாவது கோலை அடித்து இந்த கால்பந்து தொடரின் முதல் ஹாட்ரிக் (Hat-trick) கோலை அடித்து சாதனை படைத்தார்.
இதனைத் தொடர்ந்து மெஸ்ஸிக்கு மாற்று வீரர் வந்ததால், மைதானத்தில் இருந்து மெஸ்ஸி வெளியேற மைதானமே அவருக்கு எழுந்து நின்று மரியாதை அளித்தது. இறுதியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கணக்கில் அல்ஜீரியா அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியில் 3 கோல்கள் அடித்ததன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்த ஜெர்மனி வீரர் குளோஸின் (Miroslav Klose) 16 கோல்கள் என்ற சாதனையை மெஸ்ஸி சமன் செய்துள்ளார். அதோடு 17 வெற்றிகளோடு உலகக்கோப்பையில் அதிக வெற்றிகளை பெற்ற வீரர் என்ற சாதனையையும் குளோஸின் சாதனையையும் சமன் செய்துள்ளார்.
மேலும் இந்த போட்டியில் களமிறங்கியதன் மூலம் 6 உலகக்கோப்பையில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையும் மெஸ்ஸி படைத்துள்ளார். அடுத்ததாக போர்த்துக்கல் அணிக்காக ரொனால்டோ மற்றும், மெக்சிகோவின் கோல்கீப்பர் கிலெர்மோ ஒச்சோவா(Guillermo Ochoa) ஆகியோரும் இந்த சாதனையை படைக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர சர்வதேசப் போட்டிகள் மற்றும் உலகக்கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் கோல் அடித்த மிக அதிக வயதான வீரர் என்ற (38 வயது 357 நாள்) உலக சாதனையையும் மெஸ்ஸி படைத்துள்ளார். அதே போல இந்த போட்டியின்மூலம் அர்ஜென்டினா அணிக்காக 200-வது சர்வதேச போட்டியில் விளையாடியும் சாதனை படைத்துள்ளார்.

