
கர்ப்பம் குறித்த வதந்திக்கு விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா ஷர்மா பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இதனையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து 1 வருடம் முடியப் போகிறது. தங்களது முதலாம் ஆண்டு திருமண நாள் விழாவை இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் கொண்டாட உள்ளனர். இந்த ஒருவருட காலம் அவர்களுக்கு சந்தோஷமாகவே சென்றுள்ளதாக தெரிகிறது. இருவரும் வெளிநாடுகளில் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தள பக்கத்திலும் அவ்வப்போது பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே அனுஷ்கா ஷர்மா கர்ப்பம் அடைந்துள்ளார் என்று வதந்தி பரவியது. விராட் கோலியும்- அனுஷ்கா ஷர்மாவும் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாகவே அனுஷ்கா ஷர்மா புதிய பட வாய்ப்புகளை தவிர்த்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் கர்ப்பம் குறித்த வதந்திக்கு அனுஷ்கா ஷர்மா பதிலடி கொடுத்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய அனுஷ்கா ஷர்மா, “எப்படியிருந்தாலும் சிலர் வதந்திகளையே பரப்பிக் கொண்டிருக்கின்றனர். இது தேவையற்ற ஒன்று. அத்துடன் அபத்தமானது. அதுமட்டுமில்லாமல் இதுபோன்ற விஷயங்களை யாராலும் மறைக்கவும் முடியாது. திருமணத்தை வேண்டுமானால் மறைக்கலாம். ஆனால் கர்ப்பத்தை மறைக்க முடியாது.
நான் மட்டுமல்ல.. பெண் சினிமா பிரபலங்கள் இதுபோன்ற வதந்திகளை சந்திக்கின்றனர். திருமணம் நடக்கும் முன்னரே திருமணம் ஆகிவிட்டதாக கூறுகின்றனர். கர்ப்பம் அடைவதற்கு முன்னதாகவே அம்மா ஆகிவிட்டதாக சொல்கின்றனர். நான் இதுபோன்ற விஷயங்களை கண்டுகொள்வதே இல்லை. ஆனால் நான் ஒருவேளை வாசிக்க நேர்ந்தால் யார் இதுபோன்ற அபத்தமான விஷயங்களை செய்கிறார்கள் என நினைப்பதுண்டு. நான் இப்போது 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.