இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான தொடர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினை நிர்வகிக்கும் உச்சநீதிமன்ற குழுவின் தலைவரான வினோத் ராய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க போதிய அவகாசம் அளிக்கும்வகையில் அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் மேற்கிந்தியத் தீவுகள் தொடர் வரை நீடிக்கப்படுவதாகக் கூறினார். கும்ப்ளே முடிவைப் பொறுத்து இது மாறுபடலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் நடந்துவரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருடன் முடிவடைய உள்ள நிலையில், பிசிசிஐ நிர்வாகக் குழு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடர் ஜூன் 23 முதல் ஜூலை 9 வரை நடைபெறுகிறது.