இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி: ரேஸில் முந்தும் கும்ப்ளே
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவே தொடருவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருடன் அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவடைகிறது. ஆனால், பிசிசிஐ மற்றும் கேப்டன் கோலியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வெளியான தகவல் கும்ப்ளேவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. கோலி மற்றும் கும்ப்ளே இடையிலான கருத்து வேறுபாடுகளைக் களைய சச்சின், கங்குலி மற்றும் லட்சுமணன் ஆகியோர் அடங்கிய பிசிசிஐ ஆலோசனைக் குழு இங்கிலாந்து சென்றது. அதேநேரம் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சேவாக், டாம் மூடி உள்ளிட்டோர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், பயிற்சியாளர் பதவியில் கும்ப்ளேவே தொடர சச்சின், கங்குலி மற்றும் லட்சுமணன் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பயிற்சியாளராக கும்ப்ளேவின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாகவும் அந்த குழுவினர் கருதுவதாகவும் கூறப்படுகிறது. லண்டனில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.