ஜிம்பாப்வே தொடர் தோல்வி எதிரொலி: இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் பதவி விலகல்
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் தோல்வியடைந்ததை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஏஞ்சலா மேத்யூஸ் அறிவித்துள்ளார்.
மூன்றுவிதமான போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கெதிராக சமீபத்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-3 என்ற கணக்கில் இலங்கை அணி தோல்வியடைந்தது. தரவரிசையில் பின்தங்கியுள்ள ஜிம்பாப்வே அணியிடம் தோற்றதால், இலங்கை அணி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. ஜிம்பாப்வே அணிக்கெதிரான 5ஆவது போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேத்யூஸ், அணியில் தனது எதிர்காலம் குறித்து இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு உறுப்பினர்களிடம் ஆலோசிக்க இருப்பதாகத் தெரிவித்தார். இந்தநிலையில், கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இதையடுத்து இலங்கை அணியின் புதிய கேப்டனாக தினேஷ் சண்டிமால் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.