18 வயதில் உலக சாம்பியன்.. எகிப்தின் 15ஆண்டு ஆதிக்கத்தை முடித்துவைத்த இந்தியாவின் ’அனாஹத் சிங்’!
18 வயதிலேயே உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியனாகி, இந்தியாவின் முதல் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அனாஹத் சிங், 13 ஆண்டுகளாக தொடர்ந்த எகிப்தின் ஆதிக்கத்தையும் முறியடித்துள்ளார். கனடாவில் நடந்த இறுதியில் உலக தரவரிசை 20வது இடத்தில் உள்ள அவர், எகிப்தின் ருகையா சலேமை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இந்திய ஸ்குவாஷ் விளையாட்டு வரலாற்றில் உலக சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்று புதிய அத்தியாயத்தை தொடங்கிவைத்துள்ளார் இந்தியாவின் இளம் வீராங்கனையான அனாஹத் சிங். சௌரவ் கோசல், தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னாப்பா போன்ற ஸ்டார் வீரர்களால் செய்ய முடியாததை உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வென்று சாதித்துள்ளார் அனாஹத் சிங்.
கனடாவின் நியாகரா-ஆன்-த-லேக் நகரில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பெண்கள் பிரிவு இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்று 18 வயதேயான இந்தியாவின் அனாஹத் சிங் அசத்தினார். இறுதிப்போட்டியில் உலகத் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் ருகையா சலேமை எதிர்கொண்டு விளையாடினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த மோதலில் அனாஹத் சிங் 3-0 (11-3, 11-7, 11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தார். இந்தியாவிலிருந்து உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் ஆகும் முதல் நபர் அனாஹத் சிங் ஆவார். முன்னதாக, இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா கடந்த 2005-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் 13 ஆண்டுகளாக தொடர்ந்து சாம்பியன்ஷ் பட்டம் வென்றுவந்த எகிப்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார் அனாஹத் சிங். 2011 முதல் நடைபெற்ற ஒவ்வொரு தனிநபர் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் எகிப்தியப் பெண்கள் வென்று அசைக்கமுடியாத சக்தியாக விளங்கினர்.
உலக சாம்பியனாக சாதனை படைத்திருக்கும் அனாஹத் சிங் இந்திய ஸ்குவாஷ் விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்கிவைத்துள்ளார்.

