வெற்றிதான்.. ஆனாலும் இந்திய அணியை கடைசி ஓவர் வரை கதறவிட்ட பிரேஸ்வெல்! நடந்தது என்ன?

வெற்றிதான்.. ஆனாலும் இந்திய அணியை கடைசி ஓவர் வரை கதறவிட்ட பிரேஸ்வெல்! நடந்தது என்ன?
வெற்றிதான்.. ஆனாலும் இந்திய அணியை கடைசி ஓவர் வரை கதறவிட்ட பிரேஸ்வெல்! நடந்தது என்ன?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கான முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் ஐதராபாத்தில் தொடங்கியது.

4 போட்டிகளில் இந்தியா தொடர் சாதனை

இதில் டாஸ் ஜெயித்து பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த இந்திய அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன்களை எடுத்தது. குறிப்பாக, இந்திய அணி கடைசியாக ஆடிய 4 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்து 300க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து வருகிறது. வங்கதேசத்துக்கு எதிராக 409 ரன்களையும், இலங்கைக்கு எதிராக 373 மற்றும் 390 ரன்களை எடுத்திருந்த இந்திய அணி, இன்றைய போட்டியில் 349 ரன்களை எடுத்துள்ளது. 

சுப்மான் கில் இரட்டைச் சதம்

இன்றைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரராய் இறங்கிய சுப்மன் கில் இரட்டைச் சதம் அடித்ததுடன், பல சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். கடைசி ஓவர் வரை களத்தில் இருந்த அவர், 149 பந்துகளில் 19 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் உதவியுடன் 208 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுப்மான் கில்லுக்கு இது 3வது சதமாக அமைந்தது. இவர் கடந்த போட்டியிலும் சதமடித்திருந்தார். நியூசிலாந்து தரப்பில் ஹென்றி ஷிப்லே மற்றும் மிட்செல் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பரிதவித்த நியூசிலாந்து அணி

பின்னர் 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், தொடக்க வீரரான ஃபின் அலேன் மட்டும் கொஞ்ச நேரம் தாக்குப் பிடித்து விளையாடி 39 பந்துகளில் 7 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனால், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து பேட்டர்கள் யாரும் நிலைத்து நின்று விடாமல் வந்த வேகத்தில் திரும்பியபடியே இருந்தனர். இதனால் அந்த அணி ஒருகட்டத்தில் 28.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு வெறும் 131 ரன்களை மட்டுமே எடுத்து தத்தளித்தது. அப்போது பந்துவீச்சாளர்களான மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் மிட்சல் சாட்னர் ஆகியோர் முழுநேர பேட்டர்களாக மாறி இந்திய பந்து வீச்சாளர்களை மிரட்ட ஆரம்பித்தனர்.

பவுலர்கள் விக்கெட்களை வீழ்த்தாத இந்தியா 

ஆம், அவர்கள் இருவரும் தூண்போல நின்றதுடன் ஏதுவான பந்துகளை பவுண்டரி எல்லைக்கு விரட்டினர். 45 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்த சாட்னரை 46வது ஓவரில் முகம்மது சிராஜ் வெளியேற்றினார். அப்போது நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 293 ரன்களைக் குவித்திருந்தது. கிட்டத்தட்ட அந்த இணை 162 ரன்களைச் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கை டி20 தொடரிலிருந்தே எதிரணியின் கடைசி 4 விக்கெட்களை இந்திய அணி வீழ்த்த முடியாமல் திணறி வருகிறது.

பட்டையைக் கிளப்பிய நியூசிலாந்து பேட்டர்

அவ்வணிக்கு எதிராக தொடர்களைக் கைப்பற்றியபோதும் முன்னணி பேட்டர்களை விக்கெட்களை எளிதில் வீழ்த்தும் இந்திய அணியால், கடைசி 4 விக்கெட்களாகக் களமிறங்கும் பந்துவீச்சாளர்களை நீண்ட நேரம் விளையாட விடுவதுதான் ரசிகர்களுக்கு வேதனையைத் தருகிறது. அதே நிலைமைதான் இன்றைய போட்டியிலும் தொடர்ந்தது. இதனாலேயே சாட்னர் அரைசதம் அடித்தார். மைக்கேல் பிரேஸ்வெல் சதம் அடித்தார். அவருடைய அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து வெற்றிபெற்றுவிடும் என்ற எதிர்பார்த்த வேளையில் 49.2 ஓவரில் அவுட்டானது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

புள்ளிக்கணக்கில் இந்தியா முதலிடம்

பிரேஸ்வெல் 78 பந்துகளில் 10 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 140 ரன்கள் எடுத்தார். ஏழாவது வீரராய்க் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 4வது இடம்பிடித்து சாதனை படைத்தார் பிரேஸ்வெல். அவர் எடுத்த இந்த ரன்னால்தான் நியூசிலாந்து அணி 300 ரன்களையே தொட்டது. இறுதியில் அவ்வணி 49.2 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்து 12 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்திய அணி தரப்பில் முகம்மது சிராஜ் 4 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கான அடுத்த போட்டி, ஜனவரி 18ஆம் தேதி சட்டீஸ்கரில் உள்ள ராய்ப்பூரில் நடைபெற இருக்கிறது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com