கொல்லப்பட்டதாக போலிச் செய்திக்கு மத்தியில் தங்கம் வென்றார் மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா
அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு இருந்தார் மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா. அதற்கு காரணம் அவர் ஹரியானா மாநிலம் சோனிபட் அருகே சுட்டுக் கொல்லப்பட்டதாக பரவிய செய்தி தான். “நான் உயிரோடுதான் இருக்கிறேன்” என வீடியோ மூலமாக விளக்கமும் கொடுத்திருந்தார் அவர்.
அப்போது அவர் தேசிய சீனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் விளையாடுவதற்காக உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா (GONDA) நகரில் இருந்தார். இந்நிலையில் போலியான மரண செய்தி கொடுத்த அழுத்தத்திற்கு மத்தியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார் நிஷா.
“திடீரென பலர் செல்போன் மூலம் என்னை தொடர்ந்து அழைப்பு (Phone Call) விடுத்துக் கொண்டிருந்தனர். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவது தொடர்பான கவனத்தை செலுத்துவதா? அல்லது எனக்கு வரும் போன் கால்களை எடுத்து பேசுவதா? என்ற குழப்பம். அதனால் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு விளையாட்டில் கவனம் செலுத்தினேன். அதற்கு பரிசாக தங்கம் கிடைத்துள்ளது” என தெரிவித்துள்ளார் நிஷா.
ஹரியானாவில் நிஷா என்ற பெயர் கொண்ட மற்றொரு மல்யுத்த வீராங்கனை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அதில் அவரது சகோதரரும் கொல்லப்பட்டுள்ளார். பெயர் குழப்பத்தால் இது நடந்துள்ளது என்பது பின்னரே தெரியவந்தது.