அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2ஆவது சுற்றில் ஃபெடரர் போராடி வெற்றி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், ரோஜர் ஃபெடரர், பிலிஸ்கோவா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், தொடரின் மூன்றாம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், இரண்டாது சுற்றுப் போட்டியில் பிரான்சின் மிக்கேல் யூஸ்னி உடன் பலப்பரீட்சை நடத்தினார். முதல் செட்டை 6-1 எனக் கைப்பற்றிய ஃபெடரர், அடுத்த இரண்டு செட்களை 6-7, 4-6 என இழந்தார். பின்னர் சமாளித்து விளையாடிய ரோஜர் ஃபெடரர், கடைசி இரண்டு செட்களை 6-4, 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மகளிர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா, அமெரிக்காவின் நிக்கோல் கிப்ஸை எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பிலிஸ்கோவா போராடி வென்றார்.