6 விக்கெட் அள்ளினார் ஐபிஎல் அறிமுகம்: மும்பையிடம் வீழ்ந்தது சன் ரைசர்ஸ்!
மும்பைக்கு எதிரான லீக் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி நேற்று தோல்வியை தழுவியது.
ஐபிஎல் தொடரில் மும்பை இண்டியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்னில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றினார். அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் 7 ரன்னில் நடையைக் கட்டினார். தொடர்ச்சியாக விக்கெட் வீழ்ந்தன. டி காக் 19, இஷான் கிஷன் 17, ஹர்திக் பாண்ட்யா 6 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து நடையை கட்டினர். 86 ரன்னுக்குள் மும்பை அணி 6 விக்கெட்களை இழந்துவிட்டது.
கடைசி கட்டத்தில் பொல்லார்டு சிக்ஸர் மழை பொழிந்தார். அதனால், மும்பை அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் மும்பை இண்டியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. பொல்லார்டு 26 பந்தில் 4 சிக்ஸர் உட்பட 46 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
137 ரன்கள் என்ற இலக்கை நோக்கிய ஐதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோவ் 16, டேவிட் வார்னர் 15 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விஜய் சங்கரும் 5 ரன்னில் நடையை கட்டினார். 7 ஓவர்கள் முடிவில் 43 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது ஐதராபாத் அணி. அடுத்து வந்த மனீஷ் பாண்டே (16), தீபக் ஹூடா (20), யூசுப் பதான் (0) உட்பட யாருமே நிலைத்து நிற்கவில்லை. இதனால் அந்த அணி 17.4 ஓவர்களில் 96 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இதையடுத்து 40 ரன் வித்தியாசத்தின் மும்பை அணி வெற்றிபெற்றது.
மும்பை அணி தரப்பில், ஐபிஎல்-லில் அறிமுக வீரராக களமிறக்கப்பட்ட வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அல்ஜாரி ஜோசப் 3.4 ஓவர்களில் 12 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். ஐபிஎல் தொடரில் சிறப்பான பந்துவீச்சு இது. ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.