காக், டி வில்லியர்ஸ் கலக்கல்: எளிதாக வென்றது தென்னாப்பிரிக்கா
பங்களாதேஷ் உடனான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியது. இதையடுத்து டி20 போட்டியில் விளையாடுகிறது. இரு அணிக்களுக்கு இடையேயான, முதல் டி20 கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள புளோயம்போன்டீனில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டி காக்கும், டிவில்லியர்ஸும் அதிரடியாக விளையாடினர். டி காக் 59 ரன்களும் டிவில்லியர்ஸ் 49 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி, 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணியால், 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்கா, 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பங்களாதேஷ் அணியின் சவுமியா சர்க்கார் அதிகப்பட்சமாக 47 ரன்கள் எடுத்தார். முகமது சைபுதீன் 39 ரன்கள் எடுத்தார். டி வில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.