2ஆவது டி20 போட்டி: இங்கிலாந்து அணி வெற்றி!

2ஆவது டி20 போட்டி: இங்கிலாந்து அணி வெற்றி!

2ஆவது டி20 போட்டி: இங்கிலாந்து அணி வெற்றி!
Published on

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது, இந்திய கிரிக்கெட் அணி. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி, மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென் று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்தது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் தனது மாயச் சுழலை பயன்படுத்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி, லோகேஷ் ராகுலின் அதிரடி சதத்தால் அபார வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான 2 வது போட்டி கார்டிப்பில் நேற்றிரவு நடந்தது. இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களே களமிறங்கினர். இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி உட்கார வைக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஜேக் பால் அறிமுக வீரராக களமிறங்கினார்.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய வீரர்கள் ரோகித் சர்மாவும், தவானும் களமிறங்கினர். இருவரும் பொறுமையாக ஆடினர். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். ரோகித் சர்மா 5 ரன்களிலும், ஷிகர் தவான் 10 ரன்களிலும் கடந்த போட்டியில் சதமடித்த கே.எல்.ராகுல் 6 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். பின்னர் வந்த கேப்டன் விராத் கோலியும் சுரேஷ் ரெய்னாவும் பொறுப்போடு ஆடினர். 

20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த நிலையில், அடில் ரஷித் வீசிய பந்தை சுரேஷ் ரெய்னா இறங்கி வந்து அடிக்க நினைக்க, பந்து விக்கெட் கீப்பர் பட்லரிடம் தஞ்சமடைந்தது. இதையடுத்து ஸ்டம்பிங் செய்யப்பட்டு அவுட் ஆக்கப்பட்டார் ரெய்னா. பின்னர் கோலியுடன் இணைந்தார் தோனி. 47 ரன்கள் எடுத்திருந்தபோது, டேவிட் வில்லியின் பந்தைத் தூக்கியடித்தார் கோலி. அதை கேட்சாக்கினார் ரூட். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 12 ரன்களும் தோனி 32 ரன்களும் எடுக்க இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. 

149 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராய் (15 ரன்), ஜோஸ் பட்லர் (14) ஆகியோரின் விக்கெட்டை உமேஷ் யாதவும் ஜோ ரூட் (9 ரன்) விக்கெட்டை சேஹலும் விரைவாக சாய்க்க, 6.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்து தடுமாறிக்கொண்டிருந்தது இங்கிலாந்து அணி. ஆனால், அடுத்து வந்த அலெக்ஸ் ஹேல்ஸும் பேர்ஸ்டோவும் அதிரடியாக ஆடி, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 
ஹேல்ஸ் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன்  41 பந்துகளில் 58 ரன்களும் பேர்ஸ்டோவ் 2 சிக்சருடன் 18 பந்துகளில் 28 ரன்களும் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருது அலெக்ஸ் ஹேல்ஸுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது இங்கிலாந்து அணி. அடுத்தப் போட்டி வரும் 8 ஆம் தேதி நடக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com