
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 4வது டெஸ்டில் அலஸ்டைர் குக் அபாரமாக ஆடி இரட்டை சதம் அடித்தார்.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில்
தொடங்கியது. ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 327 ரன்கள் எடுத்து ஆல்
அவுட் ஆனது. அந்த அணியின் வார்னர் மட்டும் சதம் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி 67 ரன்களுக்கு
7 விக்கெட்டுகளை அந்த அணி பறிகொடுத்தது. இங்கிலாந்து தரப்பில் பிராட் 4 விக்கெட்டுகளும், ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளும்
கைப்பற்றினர்.
அடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அலஸ்டைர் குக் அபாரமாக ஆடி, இரட்டை சதம் அடித்தார். இது
அவருக்கு ஐந்தாவது இரட்டை சதம். அவர் நிலைத்து நின்று ஆடினாலும் மற்றவர்கள் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்த வண்ணம்
இருந்தனர். கேப்டன் ரூட் 61 ரன்களும் பிராட் 56 ரன்களும் எடுத்தனர். ஆட்ட நேர முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு
491 ரன்கள் எடுத்துள்ளது. குக் 244 ரன்களுடனும் ஆண்டர்சன் ரன் எதும் எடுக்காமலும் உள்ளனர்.
இங்கிலாந்து 164 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹசல்வுட், லியான், கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.