இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே, மறைந்த தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் வீட்டுக்கு சென்றார்.
தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் நெல்சன் மண்டேலா. நிறவெறிக்கு எதிராகப் போராடிய தலைவர்களுள் ஒருவரான இவர், 27 வருடம் சிறைச்சாலையில் தன் வாழ்க்கையைக் கழித்தவர். தற்போது தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நேரம் கிடைக்கும்போது அங்குள்ள பல இடங்களைச் சுற்றிப் பார்த்து வருகிறது.
இந்நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடும் லெவனில் இடம் பிடிக்காத ரஹானே, மூன்றாவது டெஸ்ட்டில் இடம் பிடித்துள்ளார். அவர் தனது மனைவி ராதிகாவுடன், ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலாவில் வீட்டுக்கு நேற்று சென்றார்.
ஜோகன்னஸ்பர்க், சொவடோவில் உள்ள மண்டேலாவின் வீடு தேசிய அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. 1999-ல் இந்த வீடு தேசிய பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த வீட்டை தனது மனைவியுடன் பார்வையிட்ட ரஹானே, அது பற்றி பிரமித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.