சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக மார்க்ரம் - டெல்லி அணிக்கு இவர்தான் கேப்டன்?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக மார்க்ரம் - டெல்லி அணிக்கு இவர்தான் கேப்டன்?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக மார்க்ரம் - டெல்லி அணிக்கு இவர்தான் கேப்டன்?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்கா வீரர் எய்டன் மார்க்ரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் மோசமான விபத்து காரணமாக தற்போது சிகிச்சையில் இருந்து வரும் ரிஷப் பந்திற்கு பதிலாக டெல்லி அணியின் கேப்டன் நியமனம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டு முழுமையாக ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறாமல் இருந்தன. இதனைத் தொடர்ந்து சில கட்டுப்பாடுகளுடன் கடந்த ஆண்டு 15-வது சீசன் ஐபிஎல் லீக் போட்டிகள் மும்பை மற்றும் புனேவில் உள்ள மைதானங்களிலும், அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவிலும், இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும் நடைபெற்றது.

2022-ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி அறிமுகப் போட்டியிலேயே சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து 2023-ம் ஆண்டுக்கான 16-வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் முக்கியமான நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற இருப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால், தத்தமது சொந்த மண்ணில் 10 அணிகளும் விளையாட உள்ளதால் இந்தாண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த சீசனுக்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் மாதம் கொச்சியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக ரூ.18.50 கோடிக்கு இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் சாம் கரன் பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். மேலும் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.17.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இங்கிலாந்து வீரர் ஹேரி ப்ரூக்கை 13. 25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து இருந்தது. அடுத்த மாதம் 31-ம் தேதி துவங்கி மே மாதம் 28-ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டனை அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில், இன்று தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் எய்டன் மார்க்ரமை அந்த அணியின் கேப்டனாக நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 28 வயதான எய்டன் மார்க்ரம் தென்னாப்பிரிக்காவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு தலைமை தாங்கி உலகக் கோப்பையை கடந்த 2014-ம் ஆண்டு வென்று கொடுத்துள்ளார்.

மேலும், இந்தாண்டு முதல் துவங்கியுள்ள தென்னாப்பிரிக்கா டி20 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி கேப்டனாக செயல்பட்டு, முதல் போட்டியிலேயே சாம்பியன் பட்டம் வென்று கொடுத்துள்ளார் எய்டன் மார்க்ரம். இதனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும் சிறப்பாக வழிநடத்தி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகவே லீக் போட்டியில் 8-வது இடத்தை பிடித்த அந்த அணியை மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கையில், ஹைதராபாத் அணி நிர்வாகம் எய்டன் மார்க்ரமை கேப்டனாக நியமித்துள்ளது. மயங்க் அகர்வால் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரும், துணைக் கேப்டனாக அக்சர் பட்டேலும் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த், அண்மையில் நிகழ்ந்த கார் விபத்து காரணமாக சிகிச்சையில் இருந்து வருவதால் இந்த சீசனில் விளையாடுவது சந்தேகமே. அதனால், அவருக்குப் பதிலாக டேவிட் வார்னரை கேப்டனாக நியமிக்க நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. ஏனெனில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தலைமை தாங்கி டேவிட் வார்னர் கடந்த 2016-ம் ஆண்டு கோப்பையை வென்று கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com