குஜராத்தில் கெத்தாக தயாராகிறது உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் கிரவுண்ட் !
இந்தியாவில் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் என்றால் அது கொல்கத்தாவில் அமைந்திருக்கும் ஈடன் கார்டன்
மைதானம்தான். ஆனால் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்றால் அது ஆஸ்திரேலியாவில் இருக்கும்
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் என்று சொல்லலாம். ஆனால், அந்த மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தையே தூக்கி
சாப்பிடும் அளவுக்கு பிரம்மாண்டமாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மொடேராவில் புதிய ஸ்டேடியம் கட்டப்பட்டு
வருகிறது. இந்த கிரிக்கெட் கிரவுண்ட் சுமார் ரூ.700 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டு வருகிறது.
என்னாது அகமதாபாத் மொடேராவா ? எங்கேயோ கேள்விப்பட்டது போல இருக்கிறதா ? ஆமாம் இது மொடேராவில்
ஏற்கெனவே இருந்த சர்தார் படேல் மைதானம்தான். ஆனால் இப்போது முழுதாக இடிக்கப்பட்டு பிரம்மாண்டமாக உருவாகி
வருகிறது. 1982 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த ஸ்டேடியம் பழமையானதால், புதிய மைதானம் கட்ட குஜராத் கிரிக்கெட்
சங்கம் முடிவு செய்தது. அதன்படி பழைய மைதானம் முற்றிலும் இடிக்கப்பட்டு 2015-இல் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.
சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் இந்த மைதானத்தில் 1.10 லட்சம் பார்வையாளர்கள் அமரும் வசதி உடையதாக
இருக்கும். தற்போது 1 லட்சம் பார்வையாளர்கள் அமரும் வசதி கொண்ட மெல்போர்ன் மைதானம் தான் உலகிலேயே பெரிய
கிரிக்கெட் மைதானமாக கருதப்படுகிறது.
இந்தியாவிலேயே பெரிய மைதானமாக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் 68000 பார்வையாளர்கள் உள்ளது. முன்பு ஈடன் கார்டனில்
90 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதி இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றியமைக்கப்பட்டது.
ஆமதாபாத்தில் புதிய மைதானம் கட்டப்பட்டு முடிந்தால் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற சிறப்பைப் பெறும். 63
ஏக்கர் பரப்பில் ரூ.700 கோடியில் புதிய மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. 4 உடைமாற்றும் அறை, பெரிய நீச்சல் குளம்,
கிளப் ஹவுஸ், உள்ளரங்க கிரிக்கெட் விளையாடும் வசதி என பல்வேறு சிறப்புகள் இதில் இடம் பெறும்.
இந்த மைதானத்தின் கட்டுமானப் பணிகளை எல் அன்டு டி நிறுவனம் கட்டுமான பணிகளை செய்து வருகிறது. மும்பையின்
பாப்புலஸ் நிறுவனம் வடிவமைப்பு பணிகளை செய்து வருகிறது. கட்டுமானப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
இதுதொடர்பாக குஜராத் கிரிக்கெட் சங்க துணைத் தலைவர் பரிமால் நத்வானி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
அதில் " உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டுமானத்தில் உள்ளது. குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் கனவு திட்டமான
இது முடிந்தால் ஒட்டுமொத்த இந்தியாவின் பெருமையாக திகழும்" என பதிவிட்டுள்ளார்.