நெருங்கிய பிஎஸ்எல் தொடர்.. அடுத்தடுத்து கொரோனா தொற்றுக்கு ஆளாகும் பாகிஸ்தான் வீரர்கள்
இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போல பாகிஸ்தான் நாட்டில் PSL (பாகிஸ்தான் சூப்பர் லீக்) என்ற தொடர் நடத்தப்பட்டு வருவது வழக்கம். இந்த லீக்கின் ஏழாவது சீசன் வரும் வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்று விளையாட உள்ள வீரர்கள் மற்றும் அணியின் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
கராச்சி கிங்ஸ் அணியின் தலைவர் வாசிம் அக்ரம், பெஷாவர் அணியின் வாஹப் ரியாஸ் மற்றும் ஹைதர் அலிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.
பெஷாவர் அணியில் கம்ரான் அக்மல் மற்றும் இக்பால் என இருவர் ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த அணியில் மொத்தம் நான்கு பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நேஷனல் மைதானத்தில் நடைபெற உள்ள சீசனின் முதல் போட்டியில் கராச்சி மற்றும் முல்தான் அணிகள் விளையாடுகின்றன.
தொடர்ச்சியாக பலமுறை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.