பிருத்வி சதம், மயங்க் இரட்டை சதம்: மிரட்டும் இந்திய ஏ அணி!
தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய ஏ அணி வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்தார்.
தென்னாப்பிரிக்க ஏ அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதலில், இந்திய போர்டு பிரசிடென்ட் அணியுடன் மோதியது. அந்தப் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இந்திய ஏ அணியுடன் அங்கீகாரமில்லாத நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளது. பெங்களூரில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க ஏ அணியின் கேப்டன் கயா ஸாண்டோ, பேட்டிங்கை தேர்தெடுத்தார்.
(மயங்க் அகர்வால்)
அதன்படி களமிறங்கிய அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியின் ருடி செகண்ட், அதிகபட்சமாக 94 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 5 விக் கெட்டை வீழ்த்தினார். சைனி, குர்பானி தலா 2 விக்கெட்டையும் சேஹல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய இந்திய ஏ அணி, 2 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிருத்வி ஷாவும் மயங்க் அகர் வாலும் அபாரமாக ஆடினர். சதமடித்த பிருத்வி 136 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மறுபக்கம் அதிரடியாக விளையாடிய மயங்க் அகர் வால் 250 பந்துகளை சந்தித்து 220 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் இருக்கிறார். அவருடன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்கள் எடுத்த நிலை யில் களத்தில் உள்ளார். மூன்றாவது நாள் இன்று ஆட்டம் நடக்கிறது.